குற்ற வழக்கில் 2 ஆண்டு தண்டனை என்றால் தானாகவே பதவி இழப்புக்கு வகை செய்யும் சட்டப்பிரிவை எதிர்த்து வழக்கு
|குற்ற வழக்கில் 2 ஆண்டு தண்டனை விதிக்கப்படுகிறபோது, மக்கள் பிரதிநிதிகளின் பதவியைத் தானாகவே இழக்கச்செய்கிற சட்டப்பிரிவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வருகிறது.
ராகுல் பதவி பறிப்பு
நாட்டை விட்டு தப்பி ஓடிய ஊழல்வாதிகளான லலித் மோடி, நிரவ்மோடி ஆகியோருடன் பிரதமர் மோடியைச் சேர்த்து அவதூறாக பேசிய வழக்கில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத் கோர்ட்டு 23-ந் தேதி 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.
அந்த தீர்ப்பு வெளியான 24 மணி நேரத்தில், ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டுள்ளது. இது நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன், காங்கிரசாரின் போராட்டங்களுக்கும் வழிவகுத்துள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் கேரளாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆபா முரளிதரன் ஒரு வழக்கு தொடுத்துள்ளார்.
வக்கீல் தீபக் பிரகாஷ் மூலம் தாக்கல் செய்துள்ள இந்த வழக்கில் அவர், "2 ஆண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காலம் குற்ற வழக்கில் தண்டிக்கப்படுகிற மக்கள் பிரதிநிதியினை தானாக தகுதி இழக்கச்செய்கிற 1951-ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8 (3), தன்னிச்சையானது மற்றும் சட்டவிரோதமானது, இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று அறிவிக்க வேண்டும்" என கோரி உள்ளார்.
இந்த வழக்கின் சாரம்சங்கள் வருமாறு:-
சுதந்திர செயல்பாடு தடுப்பு
* தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை தானாக தகுதி நீக்கம் செய்வது, ஜனநாயக கொள்கைகளுக்கு எதிரானது; அந்தந்த தொகுதிகளின் வாக்காளர்கள் தங்கள் மீது சுமத்தியுள்ள கடமைகளை சுதந்திரமாக செய்வதில் இருந்து இது அவர்களைத் தடுக்கிறது.
* தற்போதைய சூழ்நிலையில், தொடர்புடைய உறுப்பினருக்கு எதிராக கூறப்படும் குற்றங்களின் தன்மை, அழுத்தம் மற்றும் தீவிரத்தன்மை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், தகுதி நீக்கத்தை ஏற்படுத்துகிறது, மேலும் இது தானாகவே தகுதியிழப்புக்கு வழிவகுத்துள்ளது. இது இயற்கை நீதியின் கொள்கைகளுக்கு எதிரானது. இதனால், மேல்முறையீட்டு நிலை மற்றும் அத்தகைய சூழ்நிலைகளில், பொதுமக்களுக்கு தனது கடமைகளை நிறைவேற்றும் ஒரு உறுப்பினரின் மதிப்புமிக்க நேரம் வீணாகிவிடும்.
ஆதரவாளர்களின் குரலின் நீட்சி
* நாடாளும்னற உறுப்பினர்கள் மக்களின் குரல் ஆவார்கள். மேலும் அவர்கள் தங்களைத் தேர்ந்தெடுத்த லட்சக்கணக்கான ஆதரவாளர்களின் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான உரிமையை நிலைநிறுத்துகின்றனர்.
* அரசியல் சாசன சட்டம் பிரிவு 19 (1) (ஏ)-ன் கீழ் வழங்கப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் அனுபவிக்கிற உரிமையானது அவரது லட்சக்கணக்கான ஆதரவாளர்களின் குரலின் நீட்சி ஆகும்.
* தகுதி இழப்புக்கான காரணங்கள் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களின் தன்மையுடன் குறிப்பிட்டதாக இருக்க வேண்டும். 1951-ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 8(3)-ன் படி தற்போது நடைமுறையில் உள்ள பொத்தாம்பொதுவான முறையில் அல்ல.
கோரிக்கைகள்
* இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கிற அவதூறு குற்றத்தை, லில்லி தாமஸ் வழக்கின் பெரும் விளைவில் இருந்து தனித்தனியாக நீக்கவில்லை என்றால், அது மக்கள் பிரதிநிதிகளின் பிரதிநிதித்துவத்துக்கு பாதகமாக விளைவை ஏற்படுத்தி விடும்.
* 1951-ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8 (3)-ன் கீழ் மக்கள் பிரதிநிதிகள் தாமாகவே பதவி இழக்க மாட்டார்கள். இந்த பிரிவின்படி தாமாகவே பதவி இழப்பது என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று அறிவிக்க வேண்டும்.
* இந்திய தண்டனை சட்டம் பிரிவு 499 (அவதூறு) அல்லது அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வேறு எந்த குற்றமும், பேச்சு சுதந்திரத்தை மீறுவதால், எந்தவொரு உறுப்பினரையும் தானாகவே தகுதி நீக்கம் செய்யாது என்று அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு வழக்கில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.