பெங்களூரு நகரில் பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் வைக்க தடை; மாநகராட்சி கமிஷனர் உத்தரவு
|பெங்களூரு மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் வைக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும், மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் எச்சரித்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் நேற்று மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
பேனர்கள் வைக்க அனுமதி இல்லை
பெங்களூரு மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் வைக்க அனுமதி இல்லை என்று கூறி தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனாலும் விதிமுறைகளை மீறி பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி பெங்களூரு நகரில் வைக்கப்பட்டு இருந்த பிளக்ஸ் போர்டுகள், பேனர்களை அகற்றும் பணிகள் நடந்தது. அதன்படி, 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் பெங்களூரு நகர் முழுவதிலும் இருந்து அகற்றப்பட்டுள்ளது.
அந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வருகிற 25-ந் தேதியில் இருந்து பெங்களூரு நகரில் எந்த பகுதிகளிலும் பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் இருக்காது. அவை அனைத்தும் அப்புறப்படுத்தப்படும். விதிமுறைகளை மீறி இரவோடு, இரவாக பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் வைக்கும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
சட்டப்படி நடவடிக்கை
பெங்களூருவில் பல பகுதிகளில் நகரின் அழகை கெடுக்கும் விதமாக இரவோடு, இரவாக பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் வைக்கப்படுகிறது. அந்த பேனர்கள் முழுவதையும் மாநகராட்சி ஊழியர்களால் உடனடியாக அகற்ற சாத்தியமில்லை. ஏனெனில் அந்த அளவுக்கு மாநகராட்சியிடம் ஊழியர்களும் இல்லை. எனவே மாநகராட்சியின் உத்தரவை மீறி பிளக்ஸ், பேனர்கள் வைப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது உறுதி.
பெங்களூருவில் சாலை பள்ளங்களை மூடும் பணிகள் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக மீண்டும் சாலைகளில் பள்ளங்கள் உருவாகி உள்ளது. அத்துடன் வாரத்திற்கு ஒருமுறை சாலை பள்ளங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆய்வின்படி புதிதாக 3 ஆயிரம் சாலை பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அவற்றை மூடும் பணிகளும் நடந்து வருகிறது.
இவ்வாறு துஷார் கிரிநாத் கூறினார்.