அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் மரக்கன்றுகள் நட வேண்டும்; சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு
|கர்நாடகத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் மரக்கன்றுகள் நட வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் மரக்கன்றுகள் நட வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
சுகாதாரத்துறை சுற்றறிக்கை
கர்நாடக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலர் அனில்குமார், கர்நாடகத்தில் உள்ள மாவட்டம், தாலுகா அரசு ஆஸ்பத்திரிகள், நலவாழ்வு மையங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள், சுகாதார அலுவலகங்களுக்கும், மாநில வனத்துறை செயலாளர் ஜாவித் அக்தர் ஆகியோருக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:-
மரக்கன்றுகள் நட வேண்டும்
காலநிலை மாற்றத்தால் மனித ஆரோக்கியத்தில் ஏற்படும் பாதகமான விளைவுகளை தவிர்க்க சுகாதாரத்துறை புதிய நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி காலநிலை மாற்றம் மற்றும் மனித ஆரோக்கியம் என்ற தேசிய திட்டத்தின் கீழ் மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி மாவட்டம், தாலுகா அரசு ஆஸ்பத்திரிகள், நலவாழ்வு மையங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள், சுகாதார அலுவலகங்களில் கட்டாயம் தோட்டம் மற்றும் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும்.
மழைநீர் சேமிப்பு திட்டம்
இதன் மூலம் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களின் வளாகத்தில் பசுமையான சூழலை உருவாக்க வேண்டும். மேலும் மழைநீர் சேமிப்பு திட்டத்தையும் கட்டாயம் செயல்படுத்த வேண்டும். குறிப்பாக நல்ல காற்று தரும் செடிகள், மருத்துவ குணம் கொண்ட செடிகள், மரங்களை முறையாக வளர்த்து பராமரிக்க வேண்டும். இந்த பணியை உடனே தொடங்க வேண்டும். இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆஸ்பத்திரிகளில் மரம், செடிகளை நட வனத்துறையினரும் உதவ ேவண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.