ரஷியாவில் இருந்து கோவா வந்த விமானத்தில் வெடிகுண்டா? - போலீஸ் சொல்வது என்ன?
|ரஷிய விமானம் உஸ்பெகிஸ்தான் நாட்டுக்கு திருப்பி விடப்பட்டு அங்கு அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பனாஜி,
ரஷியாவில் இருந்து 247 பேருடன் கோவா வந்து கொண்டிருந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக இ-மெயில் வந்ததையடுத்து, அந்த விமானம் உஸ்பெகிஸ்தான் நாட்டுக்கு திருப்பி விடப்பட்டு அங்கு அவசரமாக தரையிறக்கப்பட்டது.
கோவா விமானம்
ரஷிய நாட்டின் தலைநகரான மாஸ்கோவில் இருந்து ஒரு சிறப்பு விமானம், கோவாவுக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இந்த விமானத்தில் 240 பயணிகளும், 7 சிப்பந்திகளும் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
ரஷியாவின் அஜூர் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விமானம், நேற்று அதிகாலை 4.15 மணிக்கு தெற்கு கோவாவில் உள்ள தபோலிம் விமான நிலையத்தில் வந்திறங்கி இருக்க வேண்டும்.
வெடிகுண்டு வைத்திருப்பதாக...
இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, அதில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தபோலிம் விமான நிலையத்துக்கு இ-மெயில் வந்தது.
இதைக்கண்டு அதிர்ந்து போன விமான நிலைய நிர்வாகம், உடனே சம்பந்தப்பட்ட விமானத்தின் விமானிக்கு தகவல் கொடுத்தது.
இதனால் விமானி, அந்த விமானத்தை தொடர்ந்து கோவாவை நோக்கி செலுத்தாமல், உஸ்பெகிஸ்தானுக்கு திருப்பி அங்கு அவசரமாக தரையிறக்கப்பட்டது. இது பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது.
போலீஸ் சொல்வது என்ன?
இதுபற்றி கோவா மூத்த போலீஸ் அதிகாரி கூறியதாவது:-
மாஸ்கோவில் இருந்து வந்து கொண்டிருந்த 'ஏஇசட்வி 2463' என்ற விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தபோலிம் விமான நிலைய இயக்குனர் அலுவலகத்துக்கு இ-மெயில் வந்தது. இந்த இ-மெயில் நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு வந்தது. இதையடுத்து அந்த விமானம் இந்திய வான்வெளிக்குள் நுழைவதற்கு முன்பாகவே உஸ்பெகிஸ்தானுக்கு திருப்பிடப்பட்டு அங்கு அதிகாலை 4.30 மணிக்கு தரையிறக்கப்பட்டது என்று அவர் கூறினார்.
இது முதல் முறையல்ல
இப்படி மாஸ்கோ விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இ-மெயில் வந்தது இது முதல் முறையல்ல.
கடந்த 9-ந் தேதியன்று இதேபோன்று மாஸ்கோவில் இருந்து அஜூர் ஏர் நிறுவனத்தின் விமானம் கோவா நோக்கி வந்து கொண்டிருந்தபோது அதில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக அஜூர் ஏர் விமான நிறுவனத்துக்கு இ-மெயில் வந்தது. அதைத் தொடர்ந்து அந்த விமானம் குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம்நகர் விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டு அங்கு பத்திரமாக தரையிறக்கப்பட்டது.