< Back
தேசிய செய்திகள்
அனைத்து அரசு பள்ளிகளையும் தரம் உயர்த்த திட்டமிடுங்கள் - பிரதமர் மோடிக்கு கெஜ்ரிவால் கோரிக்கை
தேசிய செய்திகள்

'அனைத்து அரசு பள்ளிகளையும் தரம் உயர்த்த திட்டமிடுங்கள்' - பிரதமர் மோடிக்கு கெஜ்ரிவால் கோரிக்கை

தினத்தந்தி
|
8 Sep 2022 2:03 AM GMT

அனைத்து பள்ளிகளையும் தரம் உயர்த்த திட்டமிடுமாறு பிரதமர் மோடிக்கு டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுடெல்லி,

நாட்டில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் 80 சதவீதத்துக்கு மேலானவை குப்பைக்கிடங்குகளை விட மோசமான நிலையில் இருப்பதால், அனைத்து பள்ளிகளையும் தரம் உயர்த்த திட்டமிடுமாறு பிரதமர் மோடிக்கு டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் மோடி கடந்த 5-ந் தேதி ஒரு அறிவிப்பு வெளியிட்டார்.

அந்த அறிவிப்பில் அவர் நாடு முழுவதும் பிரதம மந்திரி ஸ்ரீ யோஜனா திட்டத்தின் கீழ் 14 ஆயிரத்து 500 பள்ளிக்கூடங்கள் மேம்படுத்தி, தரம் உயர்த்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த பள்ளிக்கூடங்களில் ஆய்வுக்கூடங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள், நூலகங்கள், விளையாட்டு வசதிகள் என நவீன கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக இந்த அறிவிப்பு பற்றி டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் இணையவழியாக நிருபர்கள் மத்தியில் பேசும்போது பதிலடி கொடுத்தார்.

அப்போது அவர், "அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டில் உள்ள 10 லட்சம் அரசு பள்ளிக்கூடங்களை தரம் உயர்த்துவதற்கு அனைத்து மாநிலங்களையும் கலந்தாலோசனை செய்து ஒரு திட்டத்தை தயார் செய்ய வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான, இலவச கல்வியை உறுதி செய்யாமல் உலகின் நம்பர் 1 நாடாக இந்தியா ஆக முடியாது" என குறிப்பிட்டார்.

இதையொட்டி பிரதமர் மோடிக்கு கெஜ்ரிவால் ஒரு கோரிக்கையை முன்வைத்து நேற்று ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

இந்தியாவில் தினமும் 27 கோடி மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு செல்கிறார்கள். அவர்களில் 18 கோடி பேர் அரசு பள்ளிக்கூடங்களுக்கு போகிறார்கள். 80 சதவீத அரசு பள்ளிக்கூடங்களின் நிலைமை, குப்பைக்கிடங்குகளை விட மோசமாக உள்ளது. நாம் அப்படிப்பட்ட கல்வியை கொடுகிறபோது, நமது நாடு எப்படி வளர்ச்சி பெறும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.

14 ஆயிரத்து 500 பள்ளிக்கூடங்களை நவீனமயம் ஆக்குவது பற்றி அறிவித்திருக்கிறீர்கள். ஆனால் நாம் இந்த வேகத்தில் செயல்பட்டால், நமது அரசு பள்ளிக்கூடங்கள் அனைத்தையும் தரம் உயர்த்துவதற்கு 100 ஆண்டுகள் ஆகும். நாட்டில் உள்ள 10 லட்சம் அரசு பள்ளிக்கூடங்களையும் தரம் உயர்த்துவதற்கு ஒரு திட்டத்தை தயார் செய்யுங்கள் என்று அதில் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்