ஹஜ் பயணிகளின் புனித பயணம் தொடக்கம்; டெல்லியில் இருந்து புறப்பட்டது முதல் விமானம்
|2024-ம் ஆண்டில், சவுதி அரேபியாவுக்கு 1 லட்சத்து 75 ஆயிரத்து 25 இந்திய பயணிகள் ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள் என மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.
புதுடெல்லி,
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மதீனாவுக்கு ஹஜ் பயணிகளி ஏற்றி கொண்டு, இன்று அதிகாலை 2.20 மணியளவில் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. இதுபற்றி டெல்லி ஹஜ் கமிட்டியின் தலைவர் கவுசர் ஜகான் செய்தியாளர்களிடம் கூறும்போது, விமானத்தில், 285 ஹஜ் பயணிகள் பயணித்தனர்.
அவர்கள் அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார். இந்த ஆண்டில் மொத்தம் 16,500 பேர் டெல்லியில் இருந்து புறப்பட்டு செல்வார்கள் என்றும் ஜகான் கூறியுள்ளார்.
இதற்கு முன் கடந்த செவ்வாய் கிழமையன்று, ஜெட்டா மற்றும் மதீனா நகரங்களில் நடப்பு ஆண்டிற்கான ஹஜ் பயணத்திற்கான ஏற்பாடுகளை செயலாளர் முக்தேஷ் கே. பர்தேஷி மறுஆய்வு மேற்கொண்டார்.
2024 ஹஜ் ஒதுக்கீட்டின்படி, சவுதி அரேபியாவுக்கு 1 லட்சத்து 75 ஆயிரத்து 25 இந்திய பயணிகள் ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள். இதனை மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.