< Back
தேசிய செய்திகள்
நிலவில் தரையிறங்கும் முன் லேண்டர் எடுத்த புகைப்படம்; இஸ்ரோ வெளியீடு
தேசிய செய்திகள்

நிலவில் தரையிறங்கும் முன் லேண்டர் எடுத்த புகைப்படம்; இஸ்ரோ வெளியீடு

தினத்தந்தி
|
24 Aug 2023 9:56 PM IST

நிலவின் தென்துருவ பகுதியில் தரையிறங்கும் முன் லேண்டர் இமேஜர் கேமரா புகைப்படம் எடுத்து உள்ளது என இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஜூலை 14-ந்தேதி அனுப்பப்பட்டது. அதன் லேண்டர் நிலவில் நேற்று தரையிறங்கியது. பின்னர், அதில் இருந்து ரோவர் வெளியே வந்து ஆய்வு பணிகளை தொடங்கி உள்ளது.

லேண்டரில் உள்ள அனைத்து ஆய்வு கருவிகளும் செயல்பட தொடங்கியுள்ளன. தொடர்ந்து, அறிவியல் ஆய்வு பணிகள் தொடங்கி உள்ளன என இஸ்ரோ அறிவித்து உள்ளது.

இதேபோன்று, நிலவின் மேல்பரப்பில் உள்ள மண்ணின் தன்மை, வளிமண்டலம் உள்ளிட்ட விசயங்களை பற்றி ரோவர் ஆய்வு பணிகளை மேற்கொள்ளும். உந்து விசைக்கலன் அமைப்பு கடந்த ஞாயிறு முதல் தனித்து செயல்பட்டு வருகிறது என்றும் இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

நிலவின் மேல்பரப்பில் மண்ணில் உள்ள ரசாயன பொருட்களின் தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படும். நிலவில் உள்ள பாறைகள் மற்றும் மண்துகள்களில் அலுமினியம், சிலிக்கான், பொட்டாசியம் உள்ளிட்ட தனிமங்களை பற்றிய ஆய்வும் நடைபெறும்.

இந்த நிலையில், லேண்டரில் உள்ள இமேஜர் கேமரா, நிலவில் லேண்டர் தரையிறங்குவதற்கு சில வினாடிகளுக்கு முன்பு எடுத்த புகைப்படம் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் பல இடங்களில் சிறிய மற்றும் பெரிய பள்ளங்கள் காணப்படுகின்றன.

இதனை இஸ்ரோ தனது எக்ஸ் (முன்பு டுவிட்டர்) பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு உள்ளது. 2.17 நிமிடங்கள் ஓட கூடிய, இஸ்ரோ வெளியிட்ட அந்த வீடியோவில் நிலவின் மேற்பரப்பு காணப்படுகிறது.

லேண்டர் நிலவுக்கு அருகே தரையிறங்குவதற்காக இயங்கி கொண்டிருந்தபோது, புகைப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. இதனால், நிலவின் மேற்பரப்பில் உள்ள பள்ளங்கள் தெளிவாக காணப்படுகின்றன.

மேலும் செய்திகள்