சூரிய புயலின்போது ஆதித்யா எல்1 விண்கலம் எடுத்த புகைப்படம் வெளியீடு
|கடந்த மாதம் ஏற்பட்ட சூரிய புயலின்போது ஆதித்யா எல்1 விண்கலம் எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
பெங்களூரு,
கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில், கடந்த மே 10-ம்தேதி சக்தி வாய்ந்த சூரிய புயல் பூமியை தாக்கியது. இந்த சூரிய புயலை டாஸ்மானியா முதல் பிரிட்டன் வரை வானில் ஒளிக் காட்சிகளாக பார்க்க முடிந்தது. இந்த நிலையில் இந்த சூரிய புயலின்போது ஆதித்யா எல்1 விண்கலம் எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது.
சூரியனை ஆய்வு செய்ய கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ம்தேதி ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து, ஆதித்யா எல்1 என்ற விண்கலத்தை, இஸ்ரோ விண்ணில் ஏவியது. இந்த விண்கலம் 127 நாட்கள் பயணித்து இந்த ஆண்டு ஜனவரி மாதம் சூரியனின் லக்ராஞ்சியன் புள்ளியில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் கடந்த மாதம் ஏற்பட்ட சூரிய புயலின் போது ஆதித்யா எல்1 விண்கலம் எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. விண்கலத்தில் உள்ள சோலார் அல்ட்ரா வயலட் இமேஜிங் டெலஸ்கோப் (SUIT) மற்றும் விசிபிள் எமிஷன் லைன் கரோனாகிராப் (VELC) ஆகிய கருவிகள் கடந்த மே மாதம் சூரியனில் ஏற்பட்ட ஆற்றல்மிக்க செயல்பாடுகளை தெளிவாக படம்பிடித்துள்ளன.
சூரியனின் மேற்புற வளிமண்டல அடுக்கில் இருந்து வெளியாகும் அயனியாக்கப்பட்ட துகள்களுடன் எக்ஸ், எம் வகை சூரிய கதிர்களுக்கு தொடர்பு உள்ளது என்றும் சூரியனில் ஏற்படும் காந்த விசை புயலுக்கு எக்ஸ் மற்றும் எம் வகை சூரிய கதிர்கள் தான் காரணம் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.