< Back
தேசிய செய்திகள்
போன் ஒட்டு கேட்பு விவகாரம்; சித்ரா ராமகிருஷ்ணாவின் ஜாமீன் மனு தள்ளுபடி
தேசிய செய்திகள்

போன் ஒட்டு கேட்பு விவகாரம்; சித்ரா ராமகிருஷ்ணாவின் ஜாமீன் மனு தள்ளுபடி

தினத்தந்தி
|
29 Aug 2022 12:56 PM IST

சட்டவிரோத போன் ஒட்டு கேட்பு விவகாரத்தில் சித்ரா ராமகிருஷ்ணாவின் ஜாமீன் மனுவை இன்று டெல்லி கோர்ட்டு ஒன்று தள்ளுபடி செய்துள்ளது.



புதுடெல்லி,



தேசிய பங்கு சந்தையின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர், சித்ரா ராமகிருஷ்ணா. இவர், தேசிய பங்கு சந்தை விவரங்களை ஏஜன்டுகளுக்கு முன்கூட்டியே கசியவிட்ட ஊழல், நிர்வாக முறைகேடுகள், பண மோசடி தொடர்பாக சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பண மோசடி வழக்கு தொடர்பாக மத்திய விசாரணை அமைப்பான அமலாக்க இயக்ககம் விசாரித்து வருகிறது.

சித்ரா ராமகிருஷ்ணாவின் பதவிக்காலத்தில் தேசிய பங்குச்சந்தையில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து வருமானவரித்துறையும் மற்றொருபுறம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தேசிய பங்கு சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரிகளான சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் ரவி நாராயண், மும்பை காவல்துறை முன்னாள் ஆணையர் சஞ்சய் பாண்டே ஆகிய மூவர் மீது சி.பி.ஐ. புதிய வழக்கு பதிவு செய்துள்ளது.

இவர்கள் மூன்று பேரும் தேசிய பங்கு சந்தையின் முன்னாள் அதிகாரிகள், ஊழியர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டு கேட்டுள்ளனர் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த ஒட்டுகேட்பு விவகாரமானது 2009 - 2017 வரையில் கேட்கப்பட்டது எனவும் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணா தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரித்த டெல்லி ரோஸ் அவென்யூ மாவட்ட நீதிமன்றம் இன்று அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது.

இதே வழக்கில் மும்பை காவல் துறை முன்னாள் ஆணையாளர் சஞ்சய் பாண்டே தாக்கல் செய்த ஜாமீன் மனுவுக்கும், இதற்கு முன்பு இன்று கோர்ட்டு மறுப்பு தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், சித்ரா ராமகிருஷ்ணாவின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்வது என சிறப்பு நீதிபதி சுனேனா சர்மா முடிவு செய்து உள்ளார்.

இதேபோன்று சித்ரா ராமகிருஷ்ணாவின் ஜாமீன் மனுவுக்கு அமலாக்க துறையும் கோர்ட்டில் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. இந்த வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணா நேரடியாகவோ அல்லது மறைமுக அடிப்படையிலோ ஈடுபட்டு உள்ளார். தெரிந்தோ அல்லது அனைத்து நடைமுறைகளிலும் இயல்பாகவோ அவர் உதவியாக இருந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பணமோசடி குற்றத்தில் சித்ரா ராமகிருஷ்ணாவின் பங்கு மற்றும் பல்வேறு பிற நபர்களின் பங்கு என்ன என்பது பற்றி அடுத்து உறுதி செய்யப்பட வேண்டியது அவசியம். இந்த குற்ற செயல்களில் ஈடுபட்டதற்கான ஒட்டு மொத்த நடைமுறைகளை பற்றியும் தீர்மானிக்க வேண்டி உள்ளது என்றும் அமலாக்க இயக்ககம் அறிக்கை தாக்கல் செய்திருந்தது.

அதனால், சித்ரா ராமகிருஷ்ணாவை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம் என்றும் எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்ட சந்தேக நபர்களுடன் அவரையும் முன்னிறுத்துவதற்கான அவசியமும் உள்ளது என்றும் கோரி விசாரணை காவலுக்கான அனுமதியை வேண்டி, அமலாக்க இயக்ககத்தின் வழக்கறிஞர் கோர்ட்டில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவற்றை கவனத்தில் கொண்டு ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு இருக்க கூடும் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்