தசரா விழாவில் பங்கேற்கும் 2-ம் கட்ட யானைகள் 25-ந் தேதி மைசூரு வருகை
|தசரா விழாவில் பங்கேற்கும் 2-ம் கட்ட யானைகள் வருகிற 25-ந் தேதி மைசூரு அரண்மனை வளாகத்திற்கு அழைத்து வரப்படுகிறது.
மைசூரு
தசரா விழா
மைசூருவில் ஆண்டுதோறும் விஜயதசமியையொட்டி தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த தசரா விழா உலகப்பிரசித்தி பெற்றதாகும். இந்த திருவிழாவை காண வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கானோர் குவிவார்கள்.
இந்த ஆண்டு தசரா விழா அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இதில் 14 யானைகள் கலந்து கொள்கின்றன.
இந்தநிலையில், கடந்த 5-ந் தேதி முதல் கட்டமாக உன்சூர் தாலுகா வனப்பகுதியில் இருந்து 9 யானைகள் மைசூரு அரண்மனை வளாகத்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு யானைகளுக்கு நடைபயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் யானைகளுக்கு சத்தான உணவுகள் கொடுக்கப்பட்டு வருகிறது.
2-ம் கட்ட யானைகள்
இந்தநிலையில், ஜம்பு சவாரியை சுமந்து செல்லும் அபிமன்யு யானைக்கு நேற்று முன்தினம் முதல் பாரம் சுமக்கும் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. அதில், 350 கிலோ எடை கொண்ட மணல் மூட்டைகளை அபிமன்யு யானை சுமந்து சென்றது.
இந்தநிலையில் ஜம்பு சவாரியில் கலந்து கொள்வதற்காக 2-ம் கட்ட யானைகள் வருகிற 25-ந் தேதி மைசூரு அரண்மனை வளாகத்திற்கு அழைத்து வரப்படுகிறது. இதுகுறித்து மைசூரு மண்டல வனபாதுகாப்பு அதிகாரி டாக்டர் மாலதி பிரியா கூறுகையில்,
மைசூரு தசரா விழாவில் மொத்தம் 14 யானைகள் கலந்து கொள்கின்றன. அதில் ஏற்கனவே 9 யானைகள் முதல் கட்டமாக மைசூரு அரண்மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
அங்கு யானைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் 2- ம் கட்டமாக 3 புதிய யானைகள் உள்பட 5 யானைகள் வருகிற 25-ந் தேதி மைசூரு அரண்மனை வளாகத்திற்கு அழைத்து செல்லப்படுகிறது.
பல்வேறு பயிற்சிகள்
அதாவது, பந்திப்பூர் ராம்புரா வனப்பகுதியில் இருந்து ரோகிதா, இரண்ணியா, சுக்ரிவா ஆகிய 3 யானைகளும், தொட்டஅரவே யானை முகாமில் இருந்து லட்சுமி என்ற யானையும், துபாரே யானைகள் முகாமில் இருந்து பிரசாந்த் என்ற யானை உள்பட மொத்தம் 5 யானைகள் மைசூரு அரண்மனை வளாகத்திற்கு கொண்டு வரப்படுகிறது.
இதில் ரோகிதா, இரண்ணியா, சுக்ரிவா ஆகிய 3 யானைகள் தசரா விழாவில் முதல் முறையாக பங்கேற்க உள்ளது. இந்த 5 யானைகள் சேர்த்து 14 யானைகளுக்கும் வருகிற 26-ந் தேதி முதல் நடைபயிற்சி உள்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
வாகன சத்தம்
பாரம் சுமக்கும் பயிற்சி, பொதுமக்கள், வாகனங்கள் செல்லும் இடங்களில் பயிற்சி, பட்டாசு, வாகன சத்தம், மின்விளக்கு வெளிச்சம் பயிற்சி, வெடிகுண்டு சத்தம் மற்றும் வாசனை பயிற்சி என பல்வேறு பயிற்சிகள் யானைகளுக்கு அளிக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.