பி.எப்.ஐ. அமைப்பை தடை செய்ய மத்திய அரசு முடிவு எடியூரப்பா தகவல்
|பி.எப்.ஐ. அமைப்பை தடை செய்ய மத்திய அரசு முடிவு எடுத்துள்ளதாக எடியூரப்பா தகவல் அளித்துள்ளார்.
சிவமொக்கா;
சிவமொக்காவில் நேற்று முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா ஆட்சி மன்றக்குழு உறுப்பினருமான எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாட்டில் ஏற்படும் கலவரங்களுக்கும், அசம்பாவிதங்களுக்கும் முடிவு கட்ட மத்திய அரசு ஆலோசித்துள்ளது. அதன்படி பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் பி.எப்.ஐ. அமைப்பை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக எனக்கு தகவல் வந்துள்ளது.
நாட்டில் இதுவரை 40 இடங்களில் சோதனை செய்யப்பட்டு பி.எப்.ஐ. அமைப்பின் தொண்டர்கள், பிரமுகர்கள் பலரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் தேசத்துரோக செயல்களில் ஈடுபட்டார்களா என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் இவர்கள் மத்திய பா.ஜனதா அரசை கவிழ்க்க முயற்சித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. பா.ஜனதா ஆட்சியில் லஞ்சம் தலைவிரித்தாடுவதாக காங்கிரசார் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.