பி.எப்.ஐ. அமைப்பை தடை செய்தது சரியல்ல; தன்வீர் சேட் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
|பி.எப்.ஐ. அமைப்பை தடை செய்தது சரியல்ல என தன்வீர் சேட் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டியுள்ளார்.
மைசூரு;
மைசூருவில் நேற்று முன்தினம் நரசிம்மராஜா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தன்வீர் சேட், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய, மாநில அரசுகள் தாங்கள் நடத்தி இருக்கும் முறைகேடுகள், குற்றங்கள் மற்றும் மக்களின் மீதான வெறுப்புத்தன்மையை மறைக்க, தேர்தல் நோக்கத்துடன் பி.எப்.ஐ. அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பி.எப்.ஐ. அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது சரியல்ல. கண்டிக்கத்தக்கது.
யாரோ 2 பேர் செய்த தவறுக்காக அமைப்பையே தடை செய்வது சரியான முறையல்ல. அரசுக்கு உண்மையில் திறன் இருந்தால் நம் நாட்டின் மீது தாக்குதல் நடத்த துடிக்கும் பயங்கரவாதிகளை கைது செய்ய வேண்டும். பி.எப்.ஐ. சங்கத்தை ரத்து செய்திருப்பது பற்றி நான் எதையும் கூற மாட்டேன். ஆனால் இதுவரை கைதானவர்களின் நிலை மற்றும் அவர்கள் மீதான விசாரணை என்ன ஆனது?.
2 ஆண்டுகளுக்கு முன்பு என் மீது நடந்த கொலை முயற்சி வழக்கு பற்றி சரியாக விசாரணை நடத்தவில்லை. ஒரு வேளை நான் அன்று கொலை செய்யப்பட்டிருந்தால் என்னை நம்பி இருப்பவர்களின் நிலை என்னவாயிருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.