பி.எப்.ஐ. தடை: 'உபா' தீர்ப்பாய விசாரணை அதிகாரியாக நீதிபதி தினேஷ்குமார் ஷர்மா நியமனம்
|பி.எப்.ஐ. அமைப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்க, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (உபா) தீர்ப்பாய அதிகாரியாக டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி தினேஷ்குமார் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,
பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டுதல், தடை செய்யப்பட்ட இயங்களுக்கு ஆள் சேர்தல், பயிற்சி நடத்தல் உள்ளிட்ட புகாரின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை இணைந்து நாடு முழுவதும் பிஎப்ஐ அமைப்பினர் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தியது.
இதையடுத்து, நாடு முழுவதும் அந்த அமைப்பை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர். முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது.தொடர்ந்து, பிஎப்ஐ அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதிப்பதாக மத்திய அரசு அறிவித்தது.
பிஎப்ஐ அமைப்பினர் மீது நாடு முழுவதும் 1400 க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (உபா) கீழ் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அங்குள்ள ஷாகீன்பாக் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில், பி.எப்.ஐ. அமைப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்க 'உபா' தீர்ப்பாய அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (உபா) தீர்ப்பாய அதிகாரியாக டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி தினேஷ்குமார் ஷர்மாவை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.