< Back
தேசிய செய்திகள்
திருமணம் ஆன ஆண்களின் தற்கொலை அதிகரிப்பு; ஆடவர் ஆணையம் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு
தேசிய செய்திகள்

திருமணம் ஆன ஆண்களின் தற்கொலை அதிகரிப்பு; ஆடவர் ஆணையம் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு

தினத்தந்தி
|
15 March 2023 8:51 PM IST

சுப்ரீம் கோர்ட்டில் குடும்ப வன்முறையால் திருமணம் முடிந்த ஆண்களின் தற்கொலை அதிகரிப்பை எதிர்கொள்ள ஆடவர் ஆணையம் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.


புதுடெல்லி,


சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞர் மகேஷ் குமார் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார். அதில், இந்தியாவில் 2021-ம் ஆண்டில் நடந்த தற்செயலான மரணங்கள் பற்றி தேசிய குற்ற ஆவணங்கள் வாரியம் வெளியிட்ட தகவல் சுட்டி காட்டப்பட்டு இருந்தது.

இதன்படி, அந்த ஆண்டில் நாடு முழுவதும் 1 லட்சத்து 64 ஆயிரத்து 33 பேர் தற்கொலை செய்து உள்ளனர். அவர்களில் 81,063 பேர் திருமணம் முடிந்த ஆண்கள் ஆவர். 28,680 பேர் திருமணம் ஆன பெண்கள் ஆவர்.

இவற்றில் ஆண்களில், 33.2 சதவீதத்தினர் குடும்ப விவகாரங்களாலும், 4.8 சதவீதத்தினர் திருமணம் தொடர்பான விசயங்களாலும் வாழ்வை முடித்து கொண்டு உள்ளனர் என தெரிவிக்கின்றது.

இந்த ஆண்டில் மொத்தம் 1 லட்சத்து 18 ஆயிரத்து 979 ஆண்கள் தற்கொலை செய்து உள்ளனர். இது 72 சதவீதம் ஆகும். பெண்களில் 45,026 பேர் தற்கொலை செய்து உள்ளனர். இது 27 சதவீதம் ஆகும் என அந்த மனு தெரிவிக்கின்றது.

குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் ஆண்களின் புகார்களை ஏற்று கொள்ள வேண்டும் என்றும், திருமணம் ஆன ஆண்கள் தற்கொலை செய்யும் விவகாரங்களை பற்றி தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

திருமணம் ஆன ஆண்களின் தற்கொலை விவகாரங்களில், குடும்ப வன்முறை அல்லது குடும்ப பிரச்சனைகள் மற்றும் திருமணம் தொடர்பான விவகாரங்கள் ஆகியவற்றால் பாதிக்கப்படுவது பற்றி ஆய்வு நடத்திட இந்திய சட்ட ஆணையத்திற்கு உத்தரவு அல்லது பரிந்துரைகளை பிறப்பிக்க உத்தரவிட வேண்டும்.

அதன்பின்னர் தேசிய ஆடவர் ஆணையம் போன்றதோர் அமைப்பை உருகாக்குவதற்கான தேவையான அறிக்கையையும் தயாரிக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கேட்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்