தேர்தலில் பிரதமர் மோடி போட்டியிட தடை கோரிய மனு தள்ளுபடி
|பிரதமர் மோடிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
புதுடெல்லி,
டெல்லி ஐகோர்ட்டில் கடந்த 15-ந்தேதி பிரதமர் மோடிக்கு எதிராக வழக்கறிஞர் ஜோன்டேல் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார் அந்த மனுவில், "பிரதமர் மோடி, தனது தேர்தல் பிரசாரத்தின் போது மதம், கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார். வெறுப்பு பேச்சு காரணமாக பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்." என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு நீதிபதி சச்சின் தத்தா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "இதுபோன்ற கோரிக்கை மனுக்களை தேர்தல் ஆணையம் நாள்தோறும் விசாரித்து வருகிறது. மனுதாரரின் புகார் மனு தேர்தல் ஆணையத்தில் பரிசீலனையில் உள்ளது. சட்டப்படி உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்." என தெரிவித்தார்.
இதனை பதிவுசெய்துகொண்ட டெல்லி ஐகோர்ட்டு, தேர்தலில் பிரதமர் மோடி போட்டியிட தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது.