< Back
தேசிய செய்திகள்
ஜனநாயகத்தில் குரல் எழுப்புவதற்கு அனுமதி, வன்முறைக்கு அல்ல; தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பேட்டி
தேசிய செய்திகள்

ஜனநாயகத்தில் குரல் எழுப்புவதற்கு அனுமதி, வன்முறைக்கு அல்ல; தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பேட்டி

தினத்தந்தி
|
21 Jun 2022 3:52 PM IST

அக்னிவீரர்கள் பணிக்கால நிறைவுக்கு பின் கூலிப்படையினராக ஆக கூடிய சூழல் பற்றிய கேள்விக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதிலளித்து உள்ளார்.



புதுடெல்லி,



ராணுவம் உள்ளிட்ட முப்படைகளில் இந்திய இளைஞர்கள் சேர்வதற்கு அக்னிபத் என்ற புதிய திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன்படி, இளைஞர்கள் 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்க்கப்படுவார்கள்.

அதன்பின் பணியில் இருந்து ஓய்வு பெறுவோருக்கு ஓய்வூதியம் எதுவும் வழங்கப்படாது. இதனால், இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் பலர் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்தின்போது, பீகார், உத்தர பிரதேசம், டெல்லி, அரியானா, ஒடிசா, பஞ்சாப் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் வன்முறை வெடித்தது.

இதில், பல ரெயில்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. ரெயில் நிலையங்கள் சூறையாடப்பட்டன. டிக்கெட் கவுண்ட்டரில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

பீகாரில் துணை முதல்-மந்திரி மற்றும் பா.ஜ.க. தலைவர் உள்ளிட்டோரின் வீடுகள் தாக்கப்பட்டன. போராட்டங்களை சில பயிற்சி நிலையங்கள் தூண்டி விட்டுள்ளன என விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதற்கு பின்னணியில் செயல்பட்ட முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது, ஜனநாயகத்தில், போராட்டங்கள் மற்றும் உங்களுடைய குரலை எழுப்புவது நியாயப்படுத்தப்பட்டு உள்ளது. அது அனுமதிக்கப்படுகிறது. ஆனால், பொது சொத்துகளை சூறையாடுவது, வன்முறை ஆகியவை அனுமதிக்கப்படவில்லை. அவற்றை சகித்து கொள்ளவும் முடியாது என்று கூறியுள்ளார்.

இளைஞர்கள், அறியாத ஒன்றை பற்றி அச்சப்படுகின்றனர். அவர்களிடம் தவறான புரிதல்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. உள்நோக்கத்துடனோ அல்லது புரிந்து கொள்ள முடியாமலும் கூட இருக்கலாம் என கூறியுள்ளார்.

அக்னிவீரர்கள் சேவையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்பு வன்முறையில் ஈடுபடும் கூலிப்படையினராக ஆக கூடிய சூழல் உள்ளது என மக்கள் அச்சப்படுகின்றனர் என்ற கேள்விக்கு பதிலளித்த தோவல், அது முற்றிலும் ஏற்கத்தக்கதல்ல.

சமூகத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை நீடித்திருக்க செய்ய உத்தரவாதம் எதுவும் உள்ளதென்றால், அது பொதுமக்கள் சட்டத்திற்கு கீழ்படிந்து நடக்க வேண்டும் என்பதே ஆகும் என என்னால் கூறமுடியும் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து கேள்விக்கான அவரது பதிலாக, 4 ஆண்டுகள் கழித்து இளைஞர்களின் நிலை சிறப்புடனேயே இருக்கும். அவர்கள் இளைஞர்களாக இருப்பார்கள். அவர்களிடம் சான்றிதழ்கள், திறமைகள் இருக்கும். பணமும் இருக்கும். அவற்றை முதலீடு செய்ய முடியும். அக்னிபத் காலநிறைவுக்கு பின் வருங்காலம் பற்றி அவர்கள் வருத்தப்பட வேண்டியதில்லை.

பணத்திற்காக ராணுவத்துக்கு மக்கள் போவதில்லை. நாட்டுக்கு சேவை செய்யும் எண்ணத்துடனேயே செல்கிறார்கள். உங்களுடைய நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை உங்களிடம் இல்லை என்றால், ராணுவம் உங்களுக்கானதல்ல என்று போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களுக்கான தகவலாக கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்