உடுப்பியில் கடல் அரிப்பை தடுக்க நிரந்தர தீர்வு மந்திரி லட்சுமி ஹெப்பால்கர் பேட்டி
|மத்திய-மாநில அரசின் உதவியுடன் உடுப்பியில் கடல் அரிப்பை தடுக்க நிரந்தர தீர்வு காணப்படும் என்று மந்திரி லட்சுமி ஹெப்பால்கர் தெரிவித்துள்ளார்.
மங்களூரு-
மத்திய-மாநில அரசின் உதவியுடன் உடுப்பியில் கடல் அரிப்பை தடுக்க நிரந்தர தீர்வு காணப்படும் என்று மந்திரி லட்சுமி ஹெப்பால்கர் தெரிவித்துள்ளார்.
மந்திரி லட்சுமி ஹெப்பால்கர் ஆய்வு
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா மாவட்டங்களில் தொடர் கனமழை கொட்டி வருகிறது. இதனால் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கனமழைக்கு பலர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் உடுப்பி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை நேற்று முன்தினம் மாவட்ட பொறுப்பு மந்திரி லட்சுமி ஹெப்பால்கர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடுப்பி மாவட்டத்தில் கனமழைக்கு 7 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் வீடுகளுக்கு சென்று மந்திரி லட்சுமி ஹெப்பால்கர், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணமும் வழங்கினார். மேலும் கடல் அரிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கும் சென்று மந்திரி லட்சுமி ஹெப்பால்கர் ஆய்வு செய்தார். அதிகாரிகளிடம் தகவல்களை கேட்டறிந்து கொண்டார்.
ரூ.5 லட்சம் நிவாரணம்
இதையடுத்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
உடுப்பி மாவட்டத்தில் பருவமழை தாமதமாக தொடங்கினாலும் பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. இயற்கை சீற்றத்தில் சிக்கி உடுப்பியில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மழை பாதிப்புகள் குறித்து நான் அடிக்கடி அதிகாரிகளுடன் கேட்டறிந்து கொண்டேன். உடுப்பி மாவட்ட அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளேன்.
மழையால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கும்படி கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளேன். மழை சேதங்களை ஆய்வு செய்ய அதிகாரிகளை நியமிக்க உத்தரவிட்டுள்ளேன். வீடுகள் சேதம், கால்நடை இழப்பிற்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்.
கடல் அரிப்பு
அரபிக்கடலில் அலையின் சீற்றம் அதிகமாக உள்ளது. இதனால் மீனவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும். உடுப்பியில் பல்வேறு பகுதிகளில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு பருவமழையின் போதும், கடல் அரிப்பு ஏற்படுகிறது. இதனால் கடற்கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மத்திய-மாநில அரசின் உதவியுடன் உடுப்பியில் கடல் அரிப்பை தடுக்க நிரந்தர தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது கலெக்டர் குர்மாராவ் உள்பட பலர் இருந்தனர்.