அரியானாவில் ஒரு பெரிய அரசியல் மாற்றம் தேவை என மக்கள் விரும்புகிறார்கள்: கெஜ்ரிவால்
|அரியானாவின் அண்டை மாநிலங்களான பஞ்சாப் மற்றும் டெல்லியின் மக்கள் அதிக மகிழ்ச்சியாக உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜிந்த்,
நடப்பு ஆண்டில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் மற்றும் அரியானாவில் வரவுள்ள சட்டசபை தேர்தல் ஆகியவற்றை முன்னிட்டு ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லி முதல்-மந்திரியான கெஜ்ரிவால், ஜிந்த் மாவட்டத்தில் பொது கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர்,
அரியனாவில் உள்ள காங்கிரஸ், பா.ஜ.க. மற்றும் ஜனநாயக் ஜன்தா கட்சி போன்ற பிற அரசியல் கட்சிகளுடன் ஒப்பிடும்போது, ஆம் ஆத்மி இன்று பெரிய கட்சியாக உள்ளது.
ஒவ்வொரு கிராமம் மற்றும் வார்டில் 15 முதல் 20 பேர் கொண்ட கமிட்டி ஒன்று உள்ளது. அரியானாவில் ஆம் ஆத்மியின் 1.25 லட்சம் கட்சி அலுவலர்கள் உள்ளனர். கடந்த 6 மாதங்களில் இந்த சாதனையை எட்டியிருக்கிறோம்.
அரியானாவில் உள்ள ஒவ்வொரு கட்சியாலும், மக்கள் விரக்தியில் உள்ளனர். அரியானாவை கடந்த 75 ஆண்டுகளாக ஆட்சி செய்த ஒவ்வோர் அரசியல் கட்சியும் தங்களுடைய சொந்த குடும்பம் பற்றியே நினைத்தது. அடுத்த 7 தலைமுறைகளுக்கு தேவையான அளவுக்கு அவர்கள் பணம் சேர்த்து வைத்து விட்டனர்.
இன்று, மக்கள் ஒரேயொரு அரசியல் கட்சி மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அது ஆம் ஆத்மி கட்சியாகும் என்று பேசியுள்ளார். எங்களுடைய பணியால், அரியானாவின் அண்டை மாநிலங்களான பஞ்சாப் மற்றும் டெல்லியின் மக்கள் அதிக மகிழ்ச்சியாக உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பஞ்சாப் மற்றும் டெல்லி மக்கள் பூஜ்ய மின்சார பில்களை பெறுகின்றர். நீங்களும் பூஜ்ய மின்சார பில்களை பெற வேண்டுமென்றால், அடுத்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மிக்கு வாக்களியுங்கள் என்று பேசியுள்ளார்.