யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததால் வனத்துறை அலுவலகத்தை அடித்து நொறுக்கிய மக்கள்
|வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் வனத்துறை அலுவலகத்தை கிராம மக்கள் அடித்து நொறுக்கினர்.
சிக்மகளூர்,
கர்நாடகாவின் சிக்மகளூர் மாவட்டத்தில் வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி மக்கள் வனத்துறை அலுவலகத்தை அடித்து நொறுக்கி உள்ளனர்.
கர்நாடகா மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள சந்தூர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த வாரம் இந்த கிராமத்தில் யானை மிதித்து பெண் ஒருவர் பலியானார். அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற சென்ற எம்எல்ஏ மீது கிராம மக்கள் தாக்குதல் நடத்தினர்.
கிராம மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் வனத்துறையினர், வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டி ஆறுதல் தெரிவிக்க வந்த எம்எல்ஏவை தாக்கியிருந்தனர்.
இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து மீண்டும் யானைகள் கிராமத்திற்குள் நுழைந்துள்ளது. ஆனால் அந்த நேரத்தில் வனத்துறை அதிகாரி ஒருவர் கூட அங்கு அருகில் இருந்த அலுவலகத்தில் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் வனத்துறை அலுவலகத்திற்கு சென்று எங்களுக்கு பயன்படாத அலுவலகம் எதற்கு என்று கூறி அங்கிருந்து அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.
அங்குள்ள வனத்துறை அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்ய முயற்சித்தும் எந்த பலனும் இல்லை. இதைத் தொடர்ந்து மாவட்ட எஸ்பி சம்பவ இடத்திற்கு வந்து கிராம மக்களிடம் தற்போது பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். இனி இது போன்று நடக்காது, வனவிலங்குகள் ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், வனத்துறை அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.