காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: டெல்லி அரசு வேண்டுகோள்
|டெல்லியில், காற்றின் தரம் வரவுள்ள நாட்களில் மேம்பட கூடும் என சுற்றுச்சூழல் துறை மந்திரி கோபால் ராய் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் கடந்த சில வாரங்களாக காற்றின் தரம் மோசம் அடைந்து காணப்பட்டது. இதனால், காலையில் நடைபயிற்சி மேற்கொண்டவர்கள், வாகனங்களில் சென்றவர்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிப்படைந்தனர்.
இந்நிலையில், டெல்லியில் காற்றின் தரம் இன்று காலை மிக மோசம் என்ற அளவில் இருந்தது. இதன்படி காற்று தர குறியீடு 323 ஆக இருந்தது. டெல்லி ஐ.ஐ.டி.யில் காற்று தர குறியீடு 321 ஆகவும், விமான நிலையம் (முனையம் 3) பகுதியில் 336 ஆகவும் மற்றும் பூசா பகுதியில் 337 ஆகவும் இருந்தது.
இந்த நிலையில், டெல்லி சுற்றுச்சூழல் துறை மந்திரி கோபால் ராய் கூறும்போது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது வேளாண் கழிவுகளை எரிப்பது 50 சதவீதம் அளவுக்கு பஞ்சாப் அரசால் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது என்று கூறியுள்ளார்.
டெல்லியில், இதற்கு முன்பு காற்றின் தரம் கடுமையான என்ற நிலையில் இருந்தது. ஆனால், காற்றின் தரம் சீராக முன்னேற்றம் அடைந்து வருகிறது. இந்த முன்னேற்றம் வருகிற நாட்களில் மேம்படும் என கூறினார்.
விதிகளை முறையாக அமல்படுத்துவது மற்றும் கண்காணிப்பதற்காக சுற்றுச்சூழல் சிறப்பு செயலாளர் தலைமையின் கீழ், 6 பேர் கொண்ட சிறப்பு அதிரடி படை ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது.
எனினும், காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஒவ்வொரு விசயத்திலும் அரசு கண்காணிப்புடன் செயல்பட்டு வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.
காற்றின் தரம் மேம்பட்டதும், பி.எஸ்.-3 மற்றும் பி.எஸ்.-4 பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் தவிர பிற லாரிகள் மற்றும் பஸ்கள் நகருக்குள் நுழைவதற்கு கடந்த சனிக்கிழமை அனுமதி அளிக்கப்பட்டது. நடந்து வரும் கட்டுமான நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்ட தடையும் நீக்கப்பட்டது.