பா.ஜனதா அரசு ஊழலில் மட்டுமே கவனம் செலுத்துவதால் மாநில மக்களுக்கு எந்த நியாயமும் கிடைக்காது- டி.கே.சிவக்குமார்
|பா.ஜனதா அரசு ஊழலில் மட்டுமே கவனம் செலுத்துவதால் மாநில மக்களுக்கு எந்த நியாயமும் கிடைக்காது என்று டி.கே.சிவக்குமார் கூறினார்.
பெங்களூருவில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
அரசு ஒப்பந்ததாரராக இருந்த சந்தோஷ், முன்னாள் மந்திரி ஈசுவரப்பா தன்னிடம் 40 சதவீதம் கமிஷன் கேட்பதாக கூறி தற்கொலை செய்திருந்தார். தனது கணவரின் சாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும், ஈசுவரப்பாவிடம் போலீசார் சரியாக விசாரணை நடத்தவில்லை எனவும் பல குற்றச்சாட்டுகளை கூறி, சந்தோசின் மனைவி கவர்னருக்கு கடிதம் எழுதி அனுப்பி வைத்துள்ளார். மந்திரிகள் கோவிந்த் கார்ஜோள், முருகேஷ் நிரானி துறைகளிலும் ஒப்பந்த பணிகளை எடுத்து சந்தோஷ் செய்திருந்தார். அவர் செய்து கொடுத்த எந்த பணிகளுக்கும் அரசு இதுவரை நிதி ஒதுக்கவில்லை. கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஊழலில் ஈடுபடுவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. இதனால் மாநில மக்களுக்கு இந்த அரசால் எந்த நியாயமும் கிடைக்காது.
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் பல மந்திரிகளுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் வெளியாகி உள்ளது. இந்த முறைகேட்டில் பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரியின் மகனுக்கு தொடர்பு இருப்பதாக, அவர்களது கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.வே தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அவரிடம் எந்த விசாரணையும் நடைபெறவில்லை. சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விசாரணை சரியாக நடப்பதாக அரசு கூறி வருகிறது. மாநிலத்தில் எந்த விதமான முறைகேடு, குற்றங்கள் நடந்தாலும், அதற்கு இந்த அரசு இருக்கும் வரை நியாயம் கிடைக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.