< Back
தேசிய செய்திகள்
மக்களிடம் மன்னிப்புக்கேட்ட பிரதமர் மோடி...! - காரணம் என்ன?
தேசிய செய்திகள்

மக்களிடம் மன்னிப்புக்கேட்ட பிரதமர் மோடி...! - காரணம் என்ன?

தினத்தந்தி
|
26 Aug 2023 5:58 PM IST

நிறைய சிரமங்களை சந்திக்கலாம்... அதற்காக நான் உங்களிடம் முன்கூட்டியே மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன் என பிரதமர் மோடி கூறினார்.

டெல்லி,

வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் கூட்டமைப்பாக ஜி20 அமைப்பு உள்ளது. இந்த அமைப்பில் 20 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

இதனிடையே, நடப்பாண்டில் ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமை வகிக்கிறது. மேலும், ஜி20 கூட்டமைப்பின் பல்வேறு கூட்டங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. வர்த்தகம், பாதுகாப்பு, சுற்றுல்லா உள்பட பல்வேறு துறைகள் தொடர்பான ஜி20 நாடுகளின் கூட்டம் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜி20 நாடுகளின் மந்திரிகள், பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

அதேவேளை, ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு வரும் 9 மற்றும் 10ம் தேதி தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் ஜி20 நாடுகளின் தலைவர்கள் உள்பட 30 நாடுகளின் தலைவர்கள், ஐரோப்பிய யூனியனின் முக்கிய தலைவர்கள், சிறப்பு விருந்தினர்களாக பல்வேறு நாடுகளின் தலைவர்கள், 14 சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் என பலர் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேவேளை, ஜி20 உச்சிமாநாடு நடைபெறும் 9 மற்றும் 10ம் தேதி அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜி20 மாநாட்டால் டெல்லி மக்கள் நிறைய சிரமங்களை சந்திக்கலாம், அதற்காக நான் உங்களிடம் முன்கூட்டியே மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா, கிரீஸ் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய பிரதமர் மோடி டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்,

ஒட்டுமொத்த நாடும் ஜி20 உச்சிமாநாட்டை நடத்துகிறது. ஆனால், விருந்தினர்கள் டெல்லிக்கு வருகின்றனர். ஜி20 உச்சிமாநாட்டை வெற்றியடைய செய்ய டெல்லி மக்களுக்கு சிறப்பு பொறுப்பு உள்ளது. நாட்டின் நற்பெயர் சிறிதளவும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதை டெல்லி மக்கள் உறுதி செய்ய வேண்டும். வரும் 5ம் தேதி முதல் 15ம் தேதி வரை மக்கள் நிறைய சிரமங்களை சந்திக்கலாம். அதற்காக டெல்லி மக்களிடம் நான் முன்கூட்டியே மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்.

அவர்கள் நம் விருந்தினர்கள், போக்குவரத்து விதிகளில் மாற்றம் ஏற்படலாம், நீங்கள் செல்ல விரும்பும் பகுதிகளுக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படலாம். ஆனால், சில விஷயங்கள் தேவைப்படுகிறது. ஜி20 உச்சிமாநாட்டில் டெல்லி மக்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. இந்திய தேசியக்கொடி மிகவும் உயரத்தில் கர்வத்துடன் பறப்பதை உறுதி செய்யும் பொறுப்பு டெல்லி மக்களுக்கு உள்ளது' என்றார்.

மேலும் செய்திகள்