< Back
தேசிய செய்திகள்
நாடாளுமன்ற நடவடிக்கைகளை மக்கள் பார்த்து கொண்டிருக்கின்றனர்:  மத்திய மந்திரி அமித்ஷா பேட்டி
தேசிய செய்திகள்

நாடாளுமன்ற நடவடிக்கைகளை மக்கள் பார்த்து கொண்டிருக்கின்றனர்: மத்திய மந்திரி அமித்ஷா பேட்டி

தினத்தந்தி
|
14 Feb 2023 11:44 AM IST

நாடாளுமன்ற நடவடிக்கைகளை பொதுமக்கள் பார்த்து கொண்டிருக்கின்றனர் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேட்டியின்போது கூறியுள்ளார்.


புதுடெல்லி,


நாட்டில் பிரபல தொழிலதிபரான கவுதம் அதானியின் நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் சந்தை ஆய்வு நிறுவனம் பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகளை எழுப்பி அறிக்கை வெளியிட்டது.

இதன் எதிரொலியாக, நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் அதானி விவகாரம் எதிரொலித்தது. நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி, தொழிலதிபர் அதானியின் சொத்துகளின் வானளாவிய அதிகரிப்புக்கு மோடி அரசே காரணம் என்ற பொருளில் குற்றம் சாட்டி பேசினார். இதற்கு பா.ஜ.க. தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழலில், நேற்று அவை கூடியதும் அதானி விவகாரம் பற்றி விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மேலவை 2 முறை ஒத்தி வைக்கப்பட்டது.

2-வது முறையாக அவை தொடங்கியதும், அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை தேவை என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தனர். இதனால், அவையில் மீண்டும் கூச்சலும், குழப்பமும் நிலவியது.

இதனை தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்ற மேலவை வருகிற மார்ச் 13-ந்தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால், பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி வருகிற மார்ச் 13-ந்தேதி நடைபெறும் என அவை தலைவர் தங்கார் அறிவிப்பு வெளியிட்டார்.

இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, அதானி விவகாரம் சுப்ரீம் கோர்ட்டின் விசாரணையில் உள்ளது. அதனால் அதுபற்றி விமர்சிப்பது முறையல்ல. ஆனால், ஹிண்டன்பர்க்-அதானி விவகாரத்தில் பா.ஜ.க. பயப்படவோ, மறைப்பதற்கோ எதுவும் இல்லை என கூறியுள்ளார்.

நாடாளுமன்ற மேலவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது பிரதமர் மோடி பேசும்போது, எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பினர். இதுபற்றி குறிப்பிட்ட மந்திரி அமித்ஷா, பிரதமரை ஒட்டுமொத்த நாடும் கவனித்து கொண்டிருக்கிறது.

சமூக ஊடக தளங்களை சென்று பாருங்கள். பிரதமர் மோடி உரைக்கு வரும் விமர்சனங்களை படித்து பாருங்கள். சில கட்சிகள் பிரதமர் உரையை கவனிக்க விரும்பாமல், அரசியல் நிலைப்பாட்டை எடுத்து உள்ளனர். பொதுமக்கள் இதனை பார்த்து கொண்டிருக்கின்றனர் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்