சரியானது என்றால் பிரதமர் மோடியின் பட்டத்தை குஜராத் பல்கலைக்கழகம் ஏன் காட்டக்கூடாது? கெஜ்ரிவால் கேள்வி
|பிரதமர் மோடியின் பட்டம் சரியானது என்றால், அதை ஏன் குஜராத் பல்கலைக்கழகம் காட்டக்கூடாது என்று கெஜ்ரிவால் கேள்வி எழுப்பினார்.
பிரதமர் மோடியின் கல்வித்தகுதி
பிரதமர் மோடியின் கல்வித்தகுதி குறித்து டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கேள்விகள் எழுப்பி வந்தார். மேலும் அவர் பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு பற்றிய தகவல்களை வழங்க வேண்டும் என்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் கேட்டிருந்தார்.
அவர் கேட்டிருந்த விவரங்களைத் தருமாறு குஜராத் பல்கலைக்கழகத்துக்கு மத்திய தகவல் ஆணையம் 2016-ம் ஆண்டு உத்தரவிட்டது.
ஐகோர்ட்டு உத்தரவு
ஆனால் அந்த உத்தரவை எதிர்த்து குஜராத் ஐகோர்ட்டில் குஜராத் பல்கலைக்கழகம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை ஐகோர்ட்டு நீதிபதி பைரன் வைஷ்ணவ் விசாரித்தார். விசாரணை முடிந்த நிலையில், பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு பற்றிய தகவல்களை அளிக்குமாறு 7 ஆண்டுகளுக்கு முன்பு பிறப்பிக்கப்பட்ட மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து நேற்று முன்தினம் அவர் உத்தரவிட்டார். அத்துடன், அவர் பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு பற்றிய தகவல்களைக் கேட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சந்தேகம் அதிகரிப்பு
இந்த நிலையில் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடியின் கல்வித்தகுதியைத் தெரிந்து கொள்ள நாட்டு மக்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், இதுபற்றிய தகவல்கள் தொடர்பான வழக்கில் குஜராத் ஐகோர்ட்டு உத்தரவால் ஒட்டு மொத்த நாடும் அதிர்ந்து போய் உள்ளது. ஏனென்றால், ஜனநாயகத்தில் தகவல்களைக் கேட்பதற்கும், கேள்விகளைக் கேட்பதற்கும் சுதந்திரம் இருக்க வேண்டும். ஆனால் குஜராத் ஐகோர்ட்டின் உத்தரவு, பிரதமர் மோடியின் கல்வித்தகுதி பற்றிய சந்தேகத்தை அதிகரித்துள்ளது.
போலியா?
பிரதமர் மோடி குஜராத் பல்கலைக்கழகத்திலோ அல்லது டெல்லி பல்கலைக்கழகத்திலோ படித்திருந்தால், அதை அவை கொண்டாடி இருக்க வேண்டும். மாறாக அவை தகவல்களை மறைக்கின்றன.
பிரதமர் மோடியின் பட்டம் சரியானது என்றால், அதை ஏன் குஜராத் பல்கலைக்கழகம் காட்டக்கூடாது?
பிரதமர் மோடியின் கல்வித்தகுதி பற்றிய தகவல்களைத் தருவதற்கு குஜராத் பல்கலைக்கழகம் தயாராக இல்லை. இதற்கு 2 காரணங்கள்தான் இருக்க முடியும். பிரதமர் மோடியின் ஆணவம் ஒரு காரணம் அல்லது அவரது பட்டம் போலியாக இருக்க வேண்டும்.
நாட்டின் தலைமை நிர்வாகி என்பதால், பிரதமர் மோடி ஒவ்வொரு நாளும் அறிவியல் மற்றும் பொருளாதாரம் உட்பட பல முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியது இருக்கும். எனவே பிரதமர் மோடியின் கல்வித்தகுதி பற்றிய கேள்வி கட்டாயம் ஆகிறது.
பிரதமர் மோடி படித்திருந்தால், பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அமல்படுத்தி இருக்க மாட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.