< Back
தேசிய செய்திகள்
பேனா நினைவுச் சின்னம் - ஜூலை 3-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
தேசிய செய்திகள்

பேனா நினைவுச் சின்னம் - ஜூலை 3-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

தினத்தந்தி
|
30 Jun 2023 1:11 PM IST

பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கு ஜூலை 3-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.

சென்னை,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் நினைவிடம் மெரினாவில் அண்ணா சமாதி அருகே அமைந்துள்ளது. கருணாநிதியின் இலக்கிய பணிகளை போற்றும் வகையில் சென்னை மெரினா கடல் பகுதியில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்தில் பிரமாண்ட பேனா நினைவுச்சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.

பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு ஏற்கனவே ஒப்புதல் வழங்கிய நிலையில் மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின்அனுமதி கோரி தமிழக அரசு விண்ணப்பித்தது. இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த கடலோர ஒழுங்குமுறை ஆணையம், மெரினா கடல்பகுதியில் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், இந்த திட்டத்தை செயல்படுத்தும் நடைமுறைகள் தொடர்பாக தவறான தகவல் அளிக்கப்பட்டால் அனுமதி வாபஸ் பெறப்படும் என்றும் அந்த ஒப்புதல் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது. கருணாநிதி பேனா நினைவு சின்னத்துக்கு மத்திய அரசின் அனைத்து அனுமதிகளும் கிடைத்திருப்பதால் விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மீனவர் நல்லத்தம்பி என்பவர் தொடர்ந்த வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு ஜூலை 3-ம் தேதி நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சுதன்சு துலியா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரையை அரசியல்வாதிகள் கல்லறை தோட்டமாக மாற்றி வருகின்றனர்; சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம்; நினைவுச் சின்னத்தை வேறு இடத்தில் அமைக்க உத்தரவிட மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் செய்திகள்