பெகாசஸ்' விவகாரம்: நிபுணர் குழு விசாரணைக்கு மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை - சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை
|பெகாசஸ் மென்பொருள் விவகாரத்தில் நிபுணர் குழுவின் விசாரணைக்கு மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு நிபுணர் குழு தனது அறிக்கையில் கூறியுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களின் செல்போன்களை பெகாசஸ் மென்பொருள் மூலம் ஒட்டு கேட்கப்பட்டதாக மிகப்பெரும் புகார் கிளம்பியது.
மத்திய அரசுக்கு எதிராக எழுந்த இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி இந்த விவகாரத்தை விசாரிப்பதற்கு முன்னாள் நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையில் நிபுணர் குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு அமைத்தது.
கடந்த ஆண்டு அக்டோர் 27-ந் தேதி அமைக்கப்பட்ட இந்த குழு தற்போது தனது அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பித்து உள்ளது.
பெகாசஸ் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, 3 பகுதிகள் கொண்ட இந்த மிக நீண்ட அறிக்கையின் முக்கிய அம்சங்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு வாசித்தது.
அதன்படி தலைமை நீதிபதி கூறியதாவது:-
பெகாசஸ் மென்பொருள் விவகாரத்தில் நிபுணர் குழுவின் விசாரணைக்கு மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை என்று நிபுணர் குழு கூறியுள்ளது. செல்போன் ஒட்டுகேட்பு குற்றச்சாட்டு தொடர்பாக ஆய்வுக்கு சமர்ப்பிக்கப்பட்ட 29 செல்போன்களில் 5-ல் ஒருவித மால்வேர் இருந்ததை சுப்ரீம் கோர்ட்டு நிபுணர் குழு கண்டறிந்து உள்ளது.
இது சற்று கவலையை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம் அந்த மால்வேருக்கு இஸ்ரேலின் உளவு மென்பொருளான பெகாசஸ்தான் காரணம் என்ற முடிவுக்கு வர முடியவில்லை.
சட்ட விரோத ஒட்டுகேட்பை தடுக்கும் வகையிலும், தனிநபர் அந்தரங்கத்தை பாதுகாக்கும் நோக்கிலும் சைபர் சட்டத்தை வலுப்படுத்தவும், சைபர் குற்றங்களை விசாரிக்க தனி விசாரணை அமைப்பை ஏற்படுத்தவும் நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.
நீதிபதி ரவீந்திரன் குழுவின் அறிக்கை பொதுவான இயல்புடையது. அது இணையதளத்தில் பதிவேற்றப்படும். இது ஒரு மிக நீண்ட அறிக்கை. எனவே இதன் எந்த பகுதிகளை வழக்கின் மனுதாரர்களுக்கு வழங்குவது என்று பரிசீலிக்கப்படும்.
இவ்வாறு தலைமை நீதிபதி கூறினார்.