இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர்.. இப்போதைக்கு அவசியம் இல்லை: சரத் பவார்
|இந்தியா கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளரை நியமிக்க வேண்டிய அவசியமில்லை என்று நிதிஷ் குமார் கூறியுள்ளார்.
புனே:
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம், காணொலி வாயிலாக இன்று நடைபெற்றது. கூட்டணியின் செயல்பாடுகள், தொகுதி பங்கீடு மற்றும் தேர்தல் தயாரிப்புகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
இக்கூட்டத்திற்கு பிறகு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், புனேயில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் நியமனம் தொடர்பாக கூட்டணி உறுப்பினர்களிடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. நிதிஷ் குமாரை கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் ஆலோசனை கூறினார்கள். ஆனால் அதற்கு நிதிஷ் குமார் சம்மதிக்கவில்லை. கட்சித் தலைவர்கள் அடங்கிய குழுவை உருவாக்க வேண்டும் என்றும், ஒருங்கிணைப்பாளரை நியமிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் நிதிஷ் குமார் கூறினார்.
தேர்தலில் ஓட்டு கேட்பதற்காக பிரதமர் வேட்பாளராக ஒருவரை முன்னிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. தேர்தலுக்குப் பிறகு தலைவரை தேர்ந்தெடுப்போம். 1977ல் நடந்த தேர்தலின்போது மொரார்ஜி தேசாய் எதிர்க்கட்சிகளால் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படவில்லை. எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றபின் அவர் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
மராட்டியத்தில் உள்ள மக்களவை தொகுதி பங்கீடு குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. முடிவு எட்டப்பட்டதும் எத்தனை தொகுதிகள் என்பதை அறிவிப்போம்.
இவ்வாறு சரத் பவார் கூறினார்.