பார்ட்டி முடிந்து திரும்பும்போது சோகம்... கார் விபத்துக்குள்ளானதில் சட்டக்கல்லூரி மாணவர்கள் 4 பேர் உயிரிழப்பு
|பார்ட்டியில் கலந்து கொண்டு விடுதிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, கார் விபத்துக்குள்ளானதில் சட்டக்கல்லூரி மாணவர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.
பாட்டியாலா,
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் 4 சட்டக்கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர். பாட்டியாலாவில் உள்ள ராஜீவ் காந்தி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவர்கள், நேற்று அருகில் உள்ள ஓட்டலில் நடைபெற்ற பார்ட்டி ஒன்றில் பங்கேற்றனர். பார்ட்டி முடிந்ததும் காரில் விடுதிக்கு திரும்பினர்.
இந்த நிலையில் பாட்சன் சாலையில் உள்ள பக்சிவாலா கிராமத்திற்கு அருகில் உள்ள நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், ஒரு மாணவி மற்றும் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.