< Back
தேசிய செய்திகள்
பதான் பட விவகாரம்; ஷாருக் கான் போஸ்டர்களை கிழித்து பஜ்ரங்தள தொண்டர்கள் போராட்டம்
தேசிய செய்திகள்

பதான் பட விவகாரம்; ஷாருக் கான் போஸ்டர்களை கிழித்து பஜ்ரங்தள தொண்டர்கள் போராட்டம்

தினத்தந்தி
|
5 Jan 2023 10:22 AM IST

சர்ச்சைக்குரிய பதான் பட விவகாரத்தில் குஜராத் மாலில் நடிகர் ஷாருக் கான் போஸ்டர்களை கிழித்து பஜ்ரங்தள தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



ஆமதாபாத்,


நடிகர் ஷாருக் கான் மற்றும் நடிகை தீபிகா படுகோனே நடிப்பில் உருவான திரைப்படம் பதான். இந்த ஆண்டு ஜனவரியில் படம் திரையரங்கிற்கு வர இருக்கிறது. இதனையொட்டி படத்தின் டிரைலர் மற்றும் பாடல் கடந்த டிசம்பரில் வெளியிடப்பட்டது.

இதில், பேஷாராம் ரங் பாடலானது கடும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. அதில் நடித்துள்ள தீபிகா படுகோனே காவி நிற உடையில் காணப்படுகிறார் என சர்ச்சை வெடித்தது. பாடலில் படுகவர்ச்சியுடன் காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. காவி நிறத்திலான பிகினி உடையில் தீபிகா தோன்றிய காட்சிகள் வெளியிடப்பட்டன.

இது இந்துமத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் உள்ளது என்று பல்வேறு இந்து அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த பாடலுக்கு தடை கோரி வழக்கும் தொடுக்கப்பட்டு உள்ளது.

அயோத்தி சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா என்பவர், காவி நிறம் கொச்சைப்படுத்தப்பட்டு உள்ளது என்றும் நடிகர் ஷாருக் கானை நேரில் பார்த்தால் உயிருடன் கொளுத்தி விடுவேன் என்றும் கூறியுள்ளார்.

யாராவது ஷாருக் கானை உயிரோடு எரித்தால், அவருக்காக நீதிமன்றம் வரை சென்று ஆதரவு தெரிவிப்பேன். காவி நிற அவமதிப்பு செய்த பதான் படம் திரையிடும் திரையரங்குகளையும் எரிப்போம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த பரபரப்புக்கு இடையே ஜம்மு மற்றும் காஷ்மீரின் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா புது சர்ச்சையை கிளப்பியுள்ளார். அவர் பேசும்போது, நடிகர் ஷாருக் கானின் புதிய படத்தில் காவி நிற ஆடைகளை அணிந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அதன்படி, காவி நிறம் இந்துக்களுக்கு உரியது மற்றும் பச்சை நிறம் என்றால் அது முஸ்லிம்களுக்கு உரிய ஒன்றா? என்ன இது? பசுக்கள் என்றால் இந்துக்களுக்கும் மற்றும் எருது என்றால் முஸ்லிம்களுக்கும் உரிய ஒன்றா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த பட விவகாரம் பற்றி பா.ஜ.க. மந்திரியான நரோட்டம் மிஷ்ரா கூறும்போது, பேஷாராம் ராங் பாடலும் எதிர்ப்புக்கு உரியது. காவி மற்றும் பச்சை நிற ஆடைகள் அணிந்துள்ள விதம், பாடலின் வண்ணம், வரிகள் மற்றும் திரைப்படத்தின் பெயரே விவகாரத்திற்கு உரியது என்று கூறினார்.

எனினும், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சி தலைவர்கள் இந்த விவாதமே அடிப்படையற்றது என கூறி உள்ளனர்.

இந்த சூழலில், குஜராத்தின் ஆமதாபாத் நகரில் வஸ்திராப்பூர் பகுதியில் பதான் பட விளம்பர நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில், ஆல்பா ஒன் மாலில் நடந்த நிகழ்ச்சியின்போது, விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் ஒரு பிரிவினரான பஜ்ரங்தள அமைப்பை சேர்ந்த தொண்டர்கள் உள்ளே புகுந்தனர்.

அவர்கள் படத்தில் நடித்துள்ள நடிகர் ஷாருக் கான், பிற நடிகர் நடிகைகளின் புகைப்படங்கள், போஸ்டர்கள், பெரிய அளவிலான கட்-அவுட்டுகள் உள்ளிட்டவற்றை கிழித்து, வீசி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த படம் திரையிடப்பட்டால், இதனை விட கடுமையான போராட்டம் நடத்தப்படும் என அந்த வணிகவளாக நிர்வாகத்தினருக்கு எச்சரிக்கை விடுத்து, அவர்கள் கோஷங்களையும் எழுப்பினர். இந்த காட்சிகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு உள்ளன.

மத்திய பிரதேசத்தில் ஐநாக்ஸ் தியேட்டரிலும் கடந்த செவ்வாய் கிழமை இந்து ஜக்ரான் மஞ்ச் அமைப்பின் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, படம் திரையிடப்பட கூடாது என்று திரையரங்க நிர்வாகத்தினரிடம் கோரிக்கை விடுத்தனர். இந்த சூழலில், வருகிற 25-ந்தேதி படம் திரைக்கு வர திட்டமிடப்பட்டு உள்ளது.



மேலும் செய்திகள்