டெல்லி விமான நிலையத்தில் பேருந்து வராததால் விமான ஓடுதள பாதையில் நடந்து சென்ற பயணிகள் - டி.ஜி.சி.ஏ. விசாரணை
|இந்த சம்பவம் தொடர்பாக விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம்(டி.ஜி.சி.ஏ.) விசாரணையை தொடங்கியுள்ளது.
புதுடெல்லி,
டெல்லி விமான நிலையத்தில் நேற்று இரவு ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் விமானம் ஒன்று ஐதராபாத்தில் இருந்து 186 பயணிகளுடன் தரையிறங்கியது. விமானத்தில் இருந்து வந்த பயணிகளை விமான நிலைய முனையத்திற்கு அழைத்துச் செல்ல விமான நிறுவனத்தின் சார்பில் ஒரே ஒரு பேருந்து மட்டும் வந்ததாக கூறப்படுகிறது.
அதில் சில பயணிகள் ஏறிச்சென்ற நிலையில், மீதம் இருந்த பயணிகளை அழைத்துச் செல்ல பேருந்து எதுவும் வரவில்லை என்றும் கூறப்படும் நிலையில், அந்த பயணிகள் விமான நிலையத்தின் ஓடுதள பாதையில் நடந்து செல்ல தொடங்கியுள்ளனர்.
விமான நிலையத்தின் ஓடுதள பாதை என்பது பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். அங்கு பயணிகள் யாரும் நடந்து செல்ல அனுமதி வழங்கப்படுவதில்லை. இந்த நிலையில், நேற்று இரவு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம்(டி.ஜி.சி.ஏ.) விசாரணையை தொடங்கியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், "ஆகஸ்ட் 6-ந்தேதி ஹைதராபாத்-டெல்லி ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் டெல்லி விமான நிலையத்திற்கு வந்திறங்கிய பயணிகள் கால் நடையாக டெர்மினல் நோக்கி நடக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்ற தகவல் தவறானது.
பயணிகளை வினான நிலையத்தின் டெர்மினல் கட்டிடத்திற்கு அழைத்துச் செல்வதற்கான பேருந்து வருவதில் சிறிது தாமதம் ஏற்பட்டது. எங்கள் ஊழியர்களின் பலமுறை கேட்டுக்கொண்ட போதிலும், ஒரு சில பயணிகள் முனையத்தை நோக்கி நடக்கத் தொடங்கினர்.
அவர்கள் சில மீட்டர் தூரம் நடந்து செல்வதற்குள், பேருந்து வரவழைக்கப்பட்டு அனைத்து பயணிகளும் பேருந்து மூலம் முனைய கட்டிடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்" என்று விமான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.