பெங்களூருவில் முழு அடைப்பு காரணமாக தமிழக அரசு பஸ்கள் ஓடாததால் பயணிகள் அவதி
|முழு அடைப்பு போராட்டம் காரணமாக பெங்களூருவில் இருந்து தமிழ்நாட்டுக்கு தமிழக அரசு பஸ்கள் ஓடாததால் பயணிகள் அவதிக்கு உள்ளானார்கள். கர்நாடக எல்லையில் இறங்கி பயணிகள் பெங்களூருவுக்கு நடந்து வந்தனர்.
பெங்களூரு:
தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. முழு அடைப்பு காரணமாக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரு சாந்திநகரில் உள்ள தமிழக அரசின் விரைவு பஸ் நிலையம், மைசூரு ரோட்டில் உள்ள சேட்டிலைட் பஸ் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் முழு அடைப்பு காரணமாகவும், முன் எச்சரிக்கையாகவும் நேற்று பெங்களூருவில் இருந்து தமிழ்நாட்டுக்கு தமிழக அரசு பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை.
நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவிலேயே தமிழ்நாட்டுக்கு பஸ்கள் இயக்குவது நிறுத்தப்பட்டது. அத்துடன் தமிழ்நாட்டில் இருந்து நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு பின்பு எந்த ஒரு தமிழக பஸ்களும் பெங்களூருவுக்கு வரவில்லை. இதன் காரணமாக சாந்திநகர் மற்றும் சேட்டிலைட் பஸ் நிலையங்கள் நேற்று பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
இதுபற்றி அறியாத பயணிகள் சாந்திநகர் மற்றும் சேட்டிலைட் பஸ் நிலையங்களுக்கு வந்தனர். தமிழ்நாட்டுக்கு பஸ்கள் ஓடாததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள். தமிழ்நாட்டில் இருந்து பெங்களூருவுக்கு இயக்கப்பட்ட தமிழக அரசு பஸ்கள் தமிழகம்-கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியிலேயே நேற்று காலையில் நிறுத்தப்பட்டது.
இதனால் கர்நாடக எல்லை பகுதியில் இறங்கிய பயணிகள், அங்கிருந்து சில கிலோ மீட்டர் நடந்து வந்து கர்நாடக அரசு பஸ்களில் ஏறி பெங்களூருவுக்கு வந்தனர். மேலும் தமிழகம்-கர்நாடக எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதன் காரணமாக பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.
முழு அடைப்பு இருந்தாலும், பெங்களூருவில் இருந்து கர்நாடக அரசு பஸ்கள் எப்போதும் போல் தமிழ்நாட்டுக்கு புறப்பட்டு சென்றது. தமிழ்நாட்டில் இருந்தும் பெங்களூருவுக்கு கர்நாடக அரசு பஸ்கள் வந்தது. அரசு பஸ்கள் இயக்கப்படாததால் தமிழக போக்குவரத்து கழகத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் சாந்திநகரில் இருந்து மட்டும் 600 டிரிப்கள் அரசு பஸ்கள் இயக்கப்படும். சேட்டிலைட் பஸ் நிலையத்தில் இருந்தும் நூற்றுக்கணக்கான பஸ்கள் தமிழ்நாட்டுக்கு இயக்கப்படுவது வழக்கமாகும்.
முழு அடைப்பு நேற்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றதன் காரணமாக மாலை 5.30 மணியில் இருந்தே தமிழ்நாட்டில் இருந்து பெங்களூருவுக்கு தமிழக அரசு பஸ்கள் வரத் தொடங்கியது. இதுபோல் சாந்திநகர் மற்றும் சேட்டிலைட் பஸ் நிலையங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு அரசு பஸ்கள் புறப்பட்டு சென்றது.
தமிழக அரசு பஸ்களில் செல்ல முன்பதிவு செய்தவர்களுக்கு டிக்கெட் கட்டணம் திரும்ப வழங்கப்படும் என்றும், தேவைப்பட்டால் அதே டிக்கெட்டில் இன்று(புதன்கிழமை) தமிழ்நாட்டுக்கு பெங்களூருவில் இருந்து பயணிக்கலாம் என்றும் போக்குவரத்து கழக அதிகாரி தெரிவித்துள்ளார்.