மத்திய மந்திரி பசுபதி பராஸ் ராஜினாமா
|சிராஜ் பஸ்வானுடன் பா.ஜ.க. கூட்டணி என்று அறிவித்ததால் மத்திய மந்திரி பதவியை பசுபதி பராஸ் ராஜினாமா செய்துள்ளார்.
பாட்னா,
பீகாரில் 2019 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. வுடன் கூட்டணி அமைத்து லோக் ஜனசக்தி போட்டியிட்டது. இதையடுத்து, அக்கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பஸ்வானுக்கு மத்திய மந்திரி பதவி வழங்கப்பட்டது.
2020-ல் ராம் விலாஸ் பஸ்வான் உயிரிழந்த நிலையில், அவரது சகோதர் பசுபதி பராஸுக்கு மத்திய மந்திரி பதவி வழங்கப்பட்டது.
இதற்கிடையே, பசுபதி பராஸ் மற்றும் ராம் விலாஸ் பஸ்வானின் மகன் சிராஜ் பஸ்வானுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.
இதனைத் தொடர்ந்து, ராஷ்டிரிய லோக் ஜனசக்தி என்ற கட்சியை பசுபதி பராஸும், லோக் ஜனசக்தி(ராம் விலாஸ்) என்ற கட்சியை சிராஜ் பஸ்வானும் தொடங்கினர். இந்த நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் சிராஜுடன் கூட்டணி அமைப்பதாக பா.ஜ.க அறிவித்ததை தொடர்ந்து, மத்திய மந்திரி பதவியில் இருந்து பசுபதி பராஸ் விலகியுள்ளார்.