மணிப்பூரில் கனமழை: நாளை வரை பள்ளிகளுக்கு விடுமுறை
|மணிப்பூரில் கனமழை காரணமாக சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் பள்ளிகளுக்கு நாளை வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இம்பால்,
மணிப்பூரின் இம்பால் மேற்கு மற்றும் இம்பால் கிழக்கு மாவட்டங்களில் இடைவிடாது பெய்து வரும் கனமழையால், 2 பெரிய ஆறுகளின் கரைகள் உடைந்ததால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று அனைத்து பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வெள்ள சூழலை கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு நாளை வரை விடுமுறை அளித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேற்கு இம்பாலில் உள்ள சிங்ஜமேய் ஓனாம் திங்கல் மற்றும் கொங்பா ஐரோங்கில் உள்ள கொங்பா நதி மற்றும் இம்பாலின் கிழக்கில் கெய்ரோவின் சில பகுதிகளில் அணை உடைந்து நீர் வெளியேறியுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கனமழையின் காரணமாக கிழக்கு இம்பாலில் உள்ள சவோம்புங், க்ஷெடிகாவோ ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இந்தியா-மியான்மர் சாலையின் 3 கி.மீ நீளத்திற்கு வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, நேற்று மதியம் சேனாபதி ஆற்றில் 25 வயதுள்ள இளைஞரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.