மைசூரு தசரா ஊர்வலத்தில் பங்கேற்ற குடகு மாவட்ட அலங்கார ஊர்திக்கு முதல் பரிசு
|மைசூரு தசரா ஊர்வலத்தில் பங்கேற்ற குடகு மாவட்ட அலங்கார ஊர்திக்கு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
குடகு;
உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா கடந்த மாதம் (செப்டம்பர்) 26-ந்தேதி தொடங்கி கடந்த 5-ந்தேதி வரை 10 நாட்கள் கோலாகலமாக நடந்தது. இதில் சிகர நிகழ்ச்சியான ஜம்புசவாரி ஊர்வலத்தில் மாநிலத்தில் உள்ள கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் 48 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடந்தது.
இதில் 31 மாவட்டங்கள் சார்பிலும் அந்தந்த மாவட்டங்களின் சிறப்புகளை கூறும் வகையிலும் வண்டிகள் பங்கேற்றன. இந்த நிலையில், மைசூரு தசரா ஊர்வலத்தில் பங்கேற்ற அலங்கார ஊர்திகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. அதாவது, சிறப்பான வடிவமைப்பு, பார்வையாளர்களை வெகுவாக கவர்வது போன்றவற்றை வைத்து அலங்கார ஊர்திகளை தேர்வு செய்து பரிசு வழங்கப்பட்டது.
இதில், குடகு மாவட்ட அலங்கார ஊர்திக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. 'கொடகெம்பா பெடகு' என்ற பெயரில் பங்கேற்ற குடகு மாவட்ட அலங்கார ஊர்தியில் பிரம்மகிரி மலை அடிவாரத்தில் காவிரியின் பிறப்பிடம்,
பாகமண்டலாவில் உள்ள பாகண்டேஸ்வரர் கோவில், நீர்வீழ்ச்சிகள், மலைத்தொடர் ஆகியவை இடம் பெற்றன. மேலும் குடகில் உள்ள நூலகம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு நவீனத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் அலங்கார ஊர்தி வடிவமைக்கப்பட்டிருந்தது.