< Back
தேசிய செய்திகள்
நாடாளுமன்ற தேர்தலில் குமாரசாமி போட்டியா?; பரபரப்பு தகவல்கள்
தேசிய செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் குமாரசாமி போட்டியா?; பரபரப்பு தகவல்கள்

தினத்தந்தி
|
13 Sept 2023 3:56 AM IST

ஒக்கலிக சமுதாய வாக்குகளை ஒருங்கிணைக்கும் வகையில் நாடாளுமன்ற தேர்தலில் குமாரசாமி போட்டியிட திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூரு:

ஒக்கலிக சமுதாய வாக்குகளை ஒருங்கிணைக்கும் வகையில் நாடாளுமன்ற தேர்தலில் குமாரசாமி போட்டியிட திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓட்டுகளை பிரித்த டி.கே.சிவக்குமார்

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. பெரும் எதிர்பார்க்கப்பட்ட பா.ஜனதா 66 தொகுதிகளிலும், ஜனதாதளம் (எஸ்) கட்சி 19 தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றன.

வரலாற்றில் முதல்முறையாக 19 தொகுதிகளில் மட்டுமே ஜனதாதளம் (எஸ்) கட்சி வெற்றி பெற்றது அக்கட்சி தலைவர்கள் மட்டுமின்றி தொண்டர்களையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. இதற்கு காரணம் காங்கிரஸ் தலைவரான டி.கே.சிவக்குமார் தான் என ஜனதாதளம் (எஸ்) கட்சியினர் கருதுகிறார்கள். ஏனெனில் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் வாக்கு வங்கியான ஒக்கலிக சமுதாய வாக்குகளை அந்த சமுதாயத்தை சேர்ந்த டி.ேக.சிவக்குமார் தன் பக்கம் இழுத்தது தான்.

பா.ஜ.க.வுடன் கூட்டணி

இதனால் கடும் அதிருப்தியில் உள்ள அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி, காங்கிரசுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றும், இழுந்துபோன தனது சமுதாய வாக்குகளை பெறவும் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க தயாராகிவருகிறார். ஏற்கனவே சட்டசபை கூட்டத்தின் போது அரசுக்கு எதிராக பா.ஜனதாவுடன், ஜனதாதளம் (எஸ்) கைகோர்த்து போராட்டம் நடத்தியது.

இந்த நிலையில் இரு கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இரு கட்சிகளும் தொகுதி பங்கீடு குறித்தும் பேசி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் டி.கே.சிவக்குமார், அவரது சகோதரர் டி.கே.சுரேஷ் ஆகியோர் பெங்களூரு புறநகர், ராமநகர் தொகுதிகளில் பலம் வாய்ந்த தலைவர்களாக உள்ளனர்.

குமாரசாமி போட்டி?

அதுபோல் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மண்டியா தொகுதியில் குமாரசாமியின் மகனும், நடிகருமான நிகில் குமாரசாமி படுதோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து சுயேச்சை போட்டியிட்ட நடிகை சுமலதா அம்பரீஷ் வெற்றி பெற்றிருந்தார். மண்டியா மாவட்டத்தில் மொத்தமுள்ள 7 சட்டசபை தொகுதிகளில் 5 இடங்களில் காங்கிரசும், கே.ஆர்.பேட்டையில் ஜனதாதளம் (எஸ்) கட்சியும், மேல்கோட்டையில் காங்கிரஸ் ஆதரவு சுயேச்சையாக போட்டியிட்ட தர்ஷன் புட்டண்ணய்யாவும் வெற்றி பெற்றுள்ளனர்.

இதனால் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசை வீழ்த்தவும், ஒக்கலிக சமுதாய வாக்குகளை ஒருங்கிணைக்கும் வகையில் குமாரசாமி போட்டியிட முடிவு செய்திருப்பதாகவும், அவர் மண்டியா அல்லது பெங்களூரு புறநகர் தொகுதியில் களமிறங்கலாம் என கூறப்படுகிறது.

தொகுதி பங்கீடு பேச்சு

இதற்கு அக்கட்சி தேசிய தலைவர் தேவேகவுடா என்ன பதில் கூறுவார் என்பது தெரியவில்லை. மேலும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்த பிறகு குமாரசாமி தான் போட்டியிடுவது பற்றி அறிவிப்பார் என அக்கட்சியினர் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

தற்போது குமாரசாமி ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்