நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்: டிசம்பர் இரண்டாவது வாரத்தில் தொடங்க வாய்ப்பு..!!
|கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முடிவடையும் என்று கூறப்படுகிறது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமாக நவம்பர் மாதம் 3-வது வாரம் தொடங்கும். கூட்டத் தொடரானது டிசம்பர் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக முடிவடையும். ஆனால், தற்போது 5 மாநில சட்டசபை தேர்தல்கள் நடந்து வருகின்றன. அதில், அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தேர்தல் முடிவுகள், டிசம்பர் 3-ந் தேதி வெளியாகின்றன.
எனவே, இந்த ஆண்டு குளிர்கால கூட்டத்தொடர், தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களில், அதாவது டிசம்பர் மாதம் 2-வது வாரத்தில் தொடங்கக்கூடும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக, கூட்டத்தொடர் முடிவடையும் என்று தெரிகிறது.
அதில் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆா்பிசி), சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றான 3 புதிய மசோதாக்கள் கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டன. அம்மசோதாக்களை ஆய்வு செய்த உள்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு தனது அறிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, குளிர்கால கூட்டத்தொடரில் அந்த 3 மசோதாக்கள், பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது. அவற்றை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி மேற்கொள்ளும் வாய்ப்புள்ளது.
தலைமை தேர்தல் கமிஷனர், தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பான முக்கிய மசோதாவும் நிலுவையில் உள்ளது. மழைக்கால கூட்டத்தொடரில் அம்மசோதா தாக்கல் செய்யப்பட்டது. தலைமை தேர்தல் கமிஷனர் பதவியை வகிப்பவர்கள் தற்போது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அந்தஸ்தில் உள்ளனர். அவர்களை மந்திரிசபை செயலாளர் அந்தஸ்துக்கு மாற்ற இம்மசோதா வகை செய்கிறது. அதற்கு எதிர்க்கட்சிகளும், முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேலும் தோ்தல் ஆணையத்தின் தன்னாட்சியை பாதிக்கும் வகையில் இந்த மசோதா உள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.