வரும் 20ஆம் தேதி தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்
|பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 20-ந்தேதி தொடங்குகிறது. மணிப்பூர் கலவரம், பொது சிவில் சட்ட விவகாரங்களை இந்த கூட்டத்தில் கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.
நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் ஆண்டுதோறும் ஜூலை-செப்டம்பர் காலத்தில் நடக்கிறது.
மத்திய மந்திரி அறிவிப்பு
இந்த ஆண்டுக்கான மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 20-ந் தேதி தொடங்குகிறது. இந்த தகவலை நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்து உள்ளார்.
20-ந் தேதி தொடங்குகிறது
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ந் தேதி தொடங்குகிறது. ஆகஸ்டு 11-ந் தேதி வரை தொடர்ந்து நடைபெறும். இதில் நாடாளுமன்றஅலுவல்கள் மற்றும் பிறநடவடிக்கைகள் மீதான ஆக்கபூர்வமான விவாதங்களுக்கு பங்களிக்க அனைத்து கட்சியினரையும் கேட்டுக்கொள்கிறேன்' என குறிப்பிட்டு இருந்தார். மேலும் அவர், '23 நாட்கள் நீடிக்கும் இந்த தொடரில் 17 அமர்வுகள் இடம்பெறும்' என்றும் கூறியுள்ளார்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில்
புதிய நாடாளுமன்ற கட்டிடம் கடந்த மே 28-ந் தேதி திறக்கப்பட்டுள்ள நிலையில், பழைய கட்டிடத்திலேயே இந்த தொடர் தொடங்கும் என தெரிகிறது. அதேநேரம் தொடரின் பிற்பாதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறும் எனவும் தகவல் வெளியாகி இருந்தன.
மசோதாக்கள்
இந்த கூட்டத்தொடரில் பல்வேறு புதிய மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. மேலும் டெல்லி அரசு நிர்வாகம் தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள அவசர சட்டத்துக்கு மாற்றாக மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதைப்போல தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மசோதாவும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் நாட்டின் ஆராய்ச்சித்திறனை மேம்படுத்துவதற்கு நிதி வழங்கும் வகையில் இந்த அறக்கட்டளை உருவாக்கப்படுகிறது. இந்த மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை ஏற்கனவே ஒப்புதல் அளித்து உள்ளது.
எதிர்க்கட்சிகள் திட்டம்
கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்த பட்ஜெட் கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகளின் அமளியால் பெரும் புயலை எதிர்கொண்டது. குறிப்பாக ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் உள்ளிட்ட விவகாரங்களில் அரசுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு போராடியதால் அலுவல்கள் முடங்கின. இதைப்போல வருகிற மழைக்கால கூட்டத்தொடரும் பெரும் சூறாவளியை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மணிப்பூர் கலவரம், பொது சிவில் சட்டம் போன்ற விவகாரங்களில் மத்திய அரசை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சாடி வருகின்றன. எனவே இந்த பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.
ஒற்றுமையை பறைசாற்ற...
எதிர்க்கட்சிகள் ஆளும் தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கவர்னர்கள், அமலாக்கத்துறை மூலமாக மத்திய அரசு செய்து வரும் பழி வாங்கல் நடவடிக்கைகள் குறித்தும் எதிர்க்கட்சிகள் தங்களது எதிர்ப்பை காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை ஓரணியில் நின்று எதிர்கொள்ள முக்கிய எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ள இந்த சூழலில், மழைக்கால கூட்டத்தொடரிலும் அந்த கட்சிகள் தங்கள் ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் மேற்படி பிரச்சினைகளை எழுப்பக்கூடும் என தெரிகிறது.