நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்
|நாளை மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
புதுடெல்லி,
ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்ற முதல் கூட்டம் ஜனாதிபதி உரையுடன் தொடங்கும். அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்துகிறார். இந்த கூட்டதொடர் புதிய நாடாளுமன்றத்தில் நடைபெறும் முதல் பட்ஜெட் கூட்டத்தொடராகும்.
இதையடுத்து நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் இடைக்கால பட்ஜெட் மட்டுமே இந்த தொடரில் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி) 9-ந் தேதி வரை நடைபெறுகிறது.
பீகாரில் ஆட்சி மாற்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட உள்ள பரபரப்பான சூழ்நிலையில் நடைபெறும் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.