< Back
தேசிய செய்திகள்
நாடாளுமன்ற சம்பவம்; கையில் துப்பாக்கி வைத்திருந்தாலும் கூட நாங்கள் பிடித்திருப்போம்:  எம்.பி. பெனிவால்
தேசிய செய்திகள்

நாடாளுமன்ற சம்பவம்; கையில் துப்பாக்கி வைத்திருந்தாலும் கூட நாங்கள் பிடித்திருப்போம்: எம்.பி. பெனிவால்

தினத்தந்தி
|
13 Dec 2023 7:27 PM IST

பாதுகாவலர்கள் வருவதற்கு முன்பே அந்த நபரை பிடித்து விட்டோம் என்று எம்.பி. பெனிவால் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று பூஜ்ய நேரம் நடந்து கொண்டிருந்தபோது, மதியம் 1 மணியளவில் பார்வையாளர்கள் வரிசையில் இருந்து 2 பேர் திடீரென உள்ளே குதித்தனர். அவர்கள் மஞ்சள் வண்ண புகையை வெளிப்படுத்தும் உலோக பொருளை வெடிக்க செய்தனர்.

சர்வாதிகாரிகளை அனுமதிக்க முடியாது என்று அந்த நபர்கள் கோஷங்களையும் எழுப்பினர். இதேபோன்று நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் ஒரு பெண் உள்பட 2 பேர் வண்ண புகையை வெளிப்படுத்தும் கேன்களை பயன்படுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டு, பிடிபட்டனர்.

இதனால், அவையில் இருந்த எம்.பி.க்கள் இடையே அதிர்ச்சி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவை உடனடியாக ஒத்தி வைக்கப்பட்டது. 2001-ம் ஆண்டு, நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு 22 ஆண்டுகள் நிறைவான நிலையில், இந்த சம்பவம் இன்று நடந்துள்ளது.

நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பியவர்கள் அன்மோல் மற்றும் நீலம் என அடையாளம் காணப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் மக்களவையில் புகுந்த நபரை எம்.பி.க்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். அவரை அடித்து, தாக்கவும் செய்தனர். இதில், ராஷ்டீரிய லோக்தந்த்ரீக் கட்சியை சேர்ந்த எம்.பி. அனுமன் பெனிவாலும் ஒருவர் ஆவார். அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, எல்லோரும் ஒரு நாள் இறக்க போகிறோம். கொரோனா பெருந்தொற்று காலத்திலேயே நாம் உயிரிழக்க இருந்தோம். பின்னர் மீண்டும் பிறந்தோம்.

நம்முடைய மக்களுக்காக நாம் இதனை செய்ய வேண்டும். அவர்களை (ஊடுருவல்காரர்களை) நாங்கள் எப்படி உள்ளே வர அனுமதிப்போம்? அந்நபருடைய கைகளில் ஒரு துப்பாக்கி இருந்தாலும் கூட நாங்கள் அவரை பிடித்திருப்போம் என்று ஆவேசத்துடன் கூறியுள்ளார்.

அவர்கள் நன்றாக பயிற்சி பெற்றவர்கள் என குற்றச்சாட்டாக கூறிய பெனிவால், அவர்களுக்கு ஆதரவாக நிச்சயம் சில சக்திகள் உள்ளன என்றும் கூறினார். பாதுகாவலர்கள் வருவதற்கு முன்பே அந்த நபரை பிடித்து விட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்