< Back
தேசிய செய்திகள்
நாடாளுமன்ற தேர்தல்; சரத்பவார் அணிக்கு ஆதரவாக அமைந்த சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
தேசிய செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல்; சரத்பவார் அணிக்கு ஆதரவாக அமைந்த சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

தினத்தந்தி
|
19 March 2024 6:50 PM IST

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சூரிய காந்த் மற்றும் கே.வி. விஸ்வநாதன் தலைமையிலான அமர்வு முன் இந்த வழக்கு விசாரணை இன்று நடந்தது.

புதுடெல்லி,

சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியானது பிளவுபடும் முன் கடிகாரம் சின்னம் வைத்திருந்தது. இந்நிலையில், அவருடைய மருமகனான அஜித் பவார் அதிக எம்.எல்.ஏ.க்களை தன்னுடன் சேர்த்து கொண்டு தனி அணியாக செயல்பட்டதுடன், தங்களுடைய அணியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் என கூறியது.

இந்த சூழலில் தேர்தல் ஆணையம், அந்த அணிக்கு கடிகாரம் சின்னம் ஒதுக்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சரத் பவார் அணியினர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மக்களவை தேர்தலில் கடிகாரம் சின்னம் பயன்படுத்துவதில் இருந்து அந்த அணிக்கு விலக்கு அளிக்க வேண்டும் என கோரினர்.

இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சூரிய காந்த் மற்றும் கே.வி. விஸ்வநாதன் தலைமையிலான அமர்வு முன் இன்று நடந்தது. இதில், சரத் பவார் அணியினர், துர்ஹாவை மனிதர் ஊதுவது போன்ற சின்னம் (துதரி என்றும் அழைக்கப்படும் பாரம்பரிய இசைக்கருவி) பயன்படுத்துவதற்கு அனுமதி அளித்து உள்ளது.

தேர்தல் ஆணையம் மற்றும் மாநில தேர்தல் ஆணையம் ஆகியோர், தேசியவாத காங்கிரஸ் கட்சி-சரத்சந்திரா பவார் என்ற பெயரிலான அணி மற்றும் துதரியை நபர் ஒருவர் ஊதுவது போன்ற சின்னம் பயன்படுத்த அங்கீகாரம் அளிக்கும்படியும் நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டு உள்ளது.

வேறு எந்த கட்சிக்கோ அல்லது சுயேச்சை வேட்பாளர்களுக்கோ இந்த சின்னம் ஒதுக்க வேண்டாம் என்றும் கேட்டு கொண்டது.

அஜித் பவார் அணியினரே உண்மையான தேசியவாத காங்கிரஸ் என கடந்த பிப்ரவரி 6-ந்தேதி தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததற்கு எதிராக, சரத் பவார் அணியினர் தாக்கல் செய்த மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்கும்படி அஜித் பவார் அணியினருக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

சரத் பவார் அணிக்கு, தேசியவாத காங்கிரஸ் கட்சி-சரத்சந்திரா பவார் என்ற பெயரை, கடந்த பிப்ரவரி 19-ந்தேதி தேர்தல் ஆணையம் ஒதுக்கிய முடிவானது, அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை தொடரும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

மேலும் செய்திகள்