நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டம்... 5 மாநில தேர்தலுக்கு தயாராகும் அரசியல் கட்சிகள்
|5 மாநில தேர்தல் முடிவுகள், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும் என கருதப்படுகிறது.
புதுடெல்லி:
சத்தீஸ்கார், மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் நிறைவடைய உள்ளதால், தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
அதன்படி சத்தீஸ்காரில் நவம்பர் 7 மற்றும் 17 என இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. மற்ற மாநிலங்களில் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும். மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17, மிசோரமில் நவம்பர் 7, ராஜஸ்தானில் நவம்பர் 23, தெலங்கானாவில் நவம்பர் 30-ல் தேர்தல் நடத்தப்படுகிறது. 5 மாநிலங்களிலும் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்படும்.
தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறியதாவது:
சத்தீஸ்கார், மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா சட்டசபை தேர்தலுக்காக, மொத்தம் உள்ள 679 சட்டமன்ற தொகுதிகளிலும் 1.77 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். 17,734 மாதிரி வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும்.
தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில், 940-க்கும் மேற்பட்ட எல்லை சோதனைச் சாவடிகள் உள்ளன. இந்த சோதனைச் சாவடிகளில் சோதனைகள் தீவிரப்படுத்தப்படும். இதன்மூலம், எல்லை தாண்டிய சட்டவிரோதப் பணம், மதுபானம், இலவச பொருட்கள் மற்றும் போதைப்பொருள்கள் போன்றவற்றின் நடமாட்டத்தை தடுக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு சில மாதங்களுக்கு முன்பு நடத்தப்படும் 5 மாநில தேர்தல் முடிவுகள், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும் என கருதப்படுகிறது. எனவே, இந்த தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகிவருகின்றன.
சத்தீஸ்கார், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ், பாஜக இடையே கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெலங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதி (ஆளுங்கட்சி), காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே மும்முனை போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.