நாடாளுமன்ற அத்துமீறல் வீடியோ; நண்பருக்கு பகிர்ந்து வைரலாக்க கூறிய லலித் ஜா
|1947-க்கு முன் அந்த சம்பவம் நடந்திருக்கும் என்றால், அதற்கு நான் ஆதரவளித்து இருக்கலாம் என்று சக்ரவர்த்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
2001-ம் ஆண்டு நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு 22 ஆண்டுகள் நிறைவான நிலையில், கடந்த புதன்கிழமை மதியம் 1 மணியளவில் நாடாளுமன்றத்தின் மக்களவையில் பூஜ்ய நேரம் நடந்து கொண்டிருந்தது. அப்போது, பார்வையாளர்கள் வரிசையில் இருந்து 2 பேர் திடீரென அவைக்குள் குதித்தனர். அவர்கள் மஞ்சள் வண்ண புகையை வெளிப்படுத்தும் உலோக பொருளை வெடிக்க செய்தனர். அதில் ஒருவர் மேஜைகள் மீது குதித்தபடி ஓடினார்.
இதேபோன்று நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் 2 பேர் வண்ண புகையை வெளிப்படுத்தும் கேன்களை பயன்படுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் சாகர் சர்மா என்பதும், மற்றொருவர் கர்நாடகாவின் மைசூரு நகரை சேர்ந்த டி. மனோரஞ்சன் என்பதும் அவர் ஓர் என்ஜினீயர் என்றும் தெரிய வந்தது.
நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பியவர்கள் அன்மோல் மற்றும் நீலம் என அடையாளம் காணப்பட்டனர். இந்த சம்பவத்தில் பின்னணியில் செயல்பட்ட முக்கிய புள்ளியான லலித் ஜா என்பவர் கடந்த வியாழக்கிழமை போலீசில் சரண் அடைந்துள்ளார்.
அவர் 7 நாள் போலீஸ் காவலுக்கு கொண்டு செல்லப்பட்டார். மகேஷ் குமவாத் 6-வது நபராக கைது செய்யப்பட்டார். இந்நிலையில், லலித் ஜாவிடம் நடந்த விசாரணையில், பல தகவல்கள் வெளிவந்தன.
அதில், மேற்கு வங்காளத்தில் உள்ள சவுரப் சக்ரவர்த்தி என்ற நண்பரிடம் நாடாளுமன்ற அத்துமீறல் வீடியோவை ஜா பகிர்ந்து உள்ளார். இதன்பின் அதனை சமூக ஊடகத்தில் பரவ செய்யும்படி கூறி ஜெய்ஹிந்த் என்றும் கூறியுள்ளார்.
இதுபற்றி சக்ரவர்த்தி கூறும்போது, கடந்த மே 14-ந்தேதியில் இருந்து லலித் ஜாவை எனக்கு தெரியும். பேஸ்புக் வழியே அவரை சந்தித்தேன். என்னுடைய பதிவுகளுக்கு லைக், விமர்சனங்களை பதிவிடுவார்.
என்னுடைய பேஸ்புக் பதிவுகளுக்கு ஆதரவு தெரிவிப்பது வழக்கம். ஆனால், ஜாவின் திட்டம் பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறியுள்ளார். எனினும், 1947-க்கு முன் அந்த சம்பவம் நடந்திருக்கும் என்றால், அதற்கு நான் ஆதரவளித்து இருக்கலாம். ஆனால், தற்போது அது தேவையற்றது என்றும் சக்ரவர்த்தி கூறியுள்ளார்.
சமூக நீதி மற்றும் நலன் பற்றி ஜா என்னிடம் பேசுவது வழக்கம். ஆனால், நாடாளுமன்ற அத்துமீறல் திட்டம் பற்றி ஒருபோதும் கூறியதோ அல்லது அதுபற்றிய விசயங்களை பகிர்ந்ததோ கிடையாது.
உத்தர பிரதேசத்தில் நடந்த பேரணி ஒன்றில் எனக்கு தங்குவதற்கான உதவிகளை ஜா செய்திருக்கிறார் என்றும் அவர் உதவிட கூடிய நபர் என்றும் சக்ரவர்த்தி கூறியுள்ளார்.