5 நாள் சிறப்பு கூட்டத்தில் முக்கிய மசோதாக்கள் கொண்டு வரப்படுமா? நாடாளுமன்றம் இன்று கூடுகிறது
|5 நாட்கள் கொண்ட கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்கள் கொண்டு வரப்படலாம் என்று கூறப்படுகிறது.
புதுடெல்லி,
பொதுவாக பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர், குளிர்கால கூட்டத்தொடர் என ஆண்டுக்கு 3 தடவை நாடாளுமன்றம் கூடுவது வழக்கம். பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனவரி மாத இறுதியில் தொடங்கி, மார்ச் மாதம் வரை நடக்கும். மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை, ஆகஸ்டு மாதங்களிலும், குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர், டிசம்பர் மாதங்களிலும் நடக்கும்.
இந்நிலையில், 5 நாட்கள் கொண்ட கூட்டத்தொடர் செப்டம்பர் 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடக்கும் என்று கடந்த மாதம் மத்திய அரசு அறிவித்தது. இது சிறப்பு கூட்டத்தொடர் என்று முதலில் கூறியது. பின்னர், இது வழக்கமான கூட்டத்தொடர் என்று தெரிவித்தது.
18-ந் தேதி மட்டும் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் கூட்டம் நடக்கும். 19-ந் தேதி முதல், புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு கூட்டத்தொடர் மாறுகிறது.
இதையொட்டி, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான ஜெகதீப் தன்கர் நேற்று தேசிய கொடி ஏற்றி வைத்தார். இது, புதிய கட்டிடத்துக்கு நாடாளுமன்றம் இடம்பெயருவதற்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரல் முதலில் வெளியிடப்படவில்லை. எதிர்க்கட்சிகள் கேட்ட பிறகு, சமீபத்தில் மத்திய அரசு நிகழ்ச்சி நிரலை வெளியிட்டது. அதன்படி, அரசியல் நிர்ணய சபையாக இருந்ததில் இருந்து கடந்த 75 ஆண்டுகால நாடாளுமன்ற பயணம், அதன் சாதனைகள், நினைவுகள், அனுபவங்கள், படிப்பினைகள் ஆகியவை குறித்து இன்று (திங்கட்கிழமை) சிறப்பு விவாதம் நடைபெறுகிறது.
மற்ற நாட்களில், தலைமை தேர்தல் கமிஷனர்கள், தேர்தல் கமிஷனர்கள் நியமன மசோதா விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படுகிறது. இம்மசோதா ஏற்கனவே மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷனர்கள் நியமன குழுவில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி விடுவிக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
வக்கீல்கள் திருத்த மசோதா, பத்திரிகை மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா ஆகிய மசோதாக்களும் மக்களவையில் தாக்கல் செய்யப்படுகின்றன. இவை ஏற்கனவே மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு விட்டன.
அஞ்சல் அலுவலக மசோதாவும் மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. இது, ஏற்கனவே மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாக்கள் மட்டுமே நிகழ்ச்சி நிரல் பட்டியலில் இடம்பெற்றிருந்த போதிலும், இவை தவிர வேறு முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு தனி உரிமை இருக்கிறது.
எனவே, வேறு முக்கிய மசோதாக்களும் எதிர்பார்க்கப்படுகின்றன. உதாரணமாக, மக்களவையிலும், மாநில சட்டசபைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா கொண்டுவரப்படும் என்ற பேச்சு எழுந்துள்ளது. சமீபத்தில், சந்திரயான்-3 திட்ட வெற்றியின்போது, பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவதை பிரதமர் மோடி சுட்டிக்காட்டி இருந்தார். அக்கருத்து, பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு வலு சேர்த்துள்ளது.
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை அமல்படுத்துவதற்கான மசோதா கொண்டுவரப்படும் என்ற யூகமும் நிலவுகிறது. நாட்டின் பெயரை 'பாரதம்' என்று மாற்றுவதற்கான நடைமுறைகளும் செய்யப்படலாம் என்று பேசப்படுகிறது. சனாதன தர்மத்துக்கு எதிரான சில எதிர்க்கட்சி பிரமுகர்களின் பேச்சுகள் நாடு முழுவதும் சர்ச்சையை எழுப்பின. அதற்கு மத்திய மந்திரிகள், பா.ஜனதா நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
சனாதன எதிர்ப்பு பேச்சுக்கு பிரதமர் மோடியும் கண்டனம் தெரிவித்தார். சிறப்பு கூட்டத்தொடரிலும் இந்த சர்ச்சை எதிரொலிக்கும் என்று தெரிகிறது. நாட்டின் பெயரை மாற்றும் விவகாரம், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் ஆகியவையும் நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விலைவாசி உயர்வு, வேலையின்மை, மணிப்பூர் கலவரம், சீனா அத்துமீறல் ஆகிய பிரச்சினைகளை எழுப்பப்போவதாக காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி கூறியுள்ளார். இந்த பிரச்சினைகளும் நாடாளுமன்றத்தில் அமளியை உருவாக்கும் என்று தெரிகிறது. ஜி-20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்கு பிரதமர் மோடிக்கு பா.ஜனதா எம்.பி.க்கள் சபையில் புகழாரம் சூட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற ஊழியர்களுக்கான புதிய சீருடையில் பா.ஜனதாவின் தேர்தல் சின்னமான 'தாமரை' படம் இடம்பெற்றுள்ளது. அதற்கு எதிர்க்கட்சிகள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அந்த பிரச்சினையும் சபையில் எழுப்பப்படும் என்று தெரிகிறது. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நாடாளுமன்றம் இன்று கூடுகிறது.
இதற்கிடையே, இந்த கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்காக மத்திய அரசு நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடத்தியது. மத்திய அரசு தரப்பில், மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், பியூஷ் கோயல், பிரகலாத் ஜோஷி ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னாள் பிரதமர் தேவேகவுடா, கனிமொழி (தி.மு.க.), ராமமோகன் நாயுடு (தெலுங்குதேசம்), டெரிக் ஓ பிரையன் (திரிணாமுல் காங்கிரஸ்), சஞ்சய்சிங் (ஆம் ஆத்மி), சஸ்மித் பத்ரா (பிஜு ஜனதாதளம்), கேசவ ராவ் (பாரத் ராஷ்டிர சமிதி), விஜயசாய் ரெட்டி (ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ்), மனோஜ் ஜா (ராஷ்டிரீய ஜனதாதளம்), அனில் ஹெக்டே (ஐக்கிய ஜனதாதளம்), ராம்கோபால் யாதவ் (சமாஜ்வாடி) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்து, கருத்தொற்றுமையுடன் நிறைவேற்ற வேண்டும் என்று பிஜு ஜனதாதளம், பாரத் ராஷ்டிர சமிதி, பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் (அஜித்பவார்) உள்பட பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அனைத்து எதிர்க்கட்சிகளும் இக்கோரிக்கையை விடுத்ததாக மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நிருபர்களிடம் தெரிவித்தார்.