< Back
தேசிய செய்திகள்
நாடாளுமன்றத்தில் சீன அத்துமீறல் விவகாரம் எப்போது விவாதிக்கப்படும்? பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி
தேசிய செய்திகள்

நாடாளுமன்றத்தில் சீன அத்துமீறல் விவகாரம் எப்போது விவாதிக்கப்படும்? பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி

தினத்தந்தி
|
18 Dec 2022 3:27 AM IST

சீன அத்துமீறல் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் எப்போது விவாதிக்கப்படும்? என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.

பா.ஜனதா, காங். மோதல்

அருணாசல பிரதேச எல்லையில் சமீபத்தில் சீன ராணுவம் அத்துமீறிய விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

ஆனால் இதற்கு அனுமதி மறுக்கப்படுவதால் அமளி, வெளிநடப்பு என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தினமும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் எல்லையில் தொடரும் சீன அத்துமீறலை குறிப்பிட்டு பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவுக்கு எதிராக சீனா போருக்கு தயாராவதாக கூறியிருந்தார். அத்துடன் மத்திய அரசையும் குற்றம் சாட்டியிருந்தார்.

ஆனால் இதற்கு ஆளும் பா.ஜனதா தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது.

மல்லிகார்ஜூன கார்கே

இது ஒருபுறம் இருக்க, சீன அத்துமீறல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அனுமதிக்காதது ஏன்? என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.

இதுகுறித்து கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது டுவிட்டர் தளத்தில், 'டோக்லாமில் 'ஜாம்பேரி முகடு' வரையிலான சீன படைக்குவிப்பு இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கான நுழைவாயிலான சிலிகுரி தாழ்வாரத்தை அச்சுறுத்துகிறது. இது நமது தேசிய பாதுகாப்புக்கு மிகுந்த கவலை அளிக்கிறது. மோடி ஜி நாடு எப்போது சீனா அத்துமீறல் குறித்த விவாதத்தை (சீனா பே சர்ச்சா) காணும்?' என கேள்வி எழுப்பி இருந்தார்.

இதைப்போல கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், சீன அத்துமீறல் தொடர்பாக தங்கள் கட்சி எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியது பிரதமர் மோடியின் தார்மீக மற்றும் அரசியல் கடமை எனக்கூறியுள்ளார்.

தேசம் அறிய விரும்புகிறது

மேலும் அவர், 'எல்லை நிலவரங்கள் குறித்தும், சீனாவிடம் இருந்து நாம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் தேசம் அறிய விரும்புகிறது. ஆனால் இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் கூடாது என்று ஏன் வலியுறுத்துகிறீர்கள்?' என்றும் வினவியுள்ளார்.

எப்போதும் இல்லாத அளவாக 18 முறை சீன அதிபரை சந்தித்திருக்கும் பிரதமர் மோடி, இந்த அத்துமீறல் பிரச்சினையில் நாட்டுக்கு நம்பிக்கை அளிக்காதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

மேலும் இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டுகளை வைப்பதன் மூலம், சீன அத்துமீறல் விவகாரத்தை திசை திருப்ப வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.

மேலும் செய்திகள்