நோயால் அவதிப்பட்ட 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு பெற்றோரும் தற்கொலை - ஐதராபாத்தில் சோகம்
|ஐதராபாத்தில் நோயால் அவதிப்பட்ட 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு பெற்றோரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்,
ஐதராபாத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்ட இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்ற தம்பதி தாங்களும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்தில் உள்ள குஷாய்குடா பகுதியை சேர்ந்த சதீஷ் - வேதா தம்பதிக்கு, 9 மற்றும் 5 வயதில் இரு ஆண் குழந்தைகள் இருந்தன. இந்த குழந்தைகள் இருவருக்கும், பிறந்தது முதல் உடல் நிலையில் தீவிர பாதிப்புகள் இருந்து வந்தன. எனவே, மகன்கள் 2 பேருக்கும் சிகிச்சை அளிக்க, கடந்த பல ஆண்டுகளாக, அந்த தம்பதி தாங்கள் சம்பாதித்த பணம் மற்றும் நண்பர்களிடம் கடன் வாங்கிய பணம் ஆகியவற்றை செலவு செய்தனர்.
எனினும், குழந்தைகள் உடல்நிலை மோசமடைந்ததால், மனவேதனை அடைந்த தம்பதி இருவரும், குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்தனர். பின்னர் இரண்டு பேரும் அதே விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், 4 பேரின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.