< Back
தேசிய செய்திகள்
பரப்பன அக்ரஹாரா சிறையில் ரூ.4½ கோடியில் ஜாமர் கருவி; கர்நாடக அரசு அனுமதி
தேசிய செய்திகள்

பரப்பன அக்ரஹாரா சிறையில் ரூ.4½ கோடியில் ஜாமர் கருவி; கர்நாடக அரசு அனுமதி

தினத்தந்தி
|
11 Jun 2023 2:54 AM IST

ரூ.4½ கோடி செலவில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜாமர் கருவி பொருத்துவதற்கு கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளது.

பெங்களூரு:

ரூ.4½ கோடி செலவில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜாமர் கருவி பொருத்துவதற்கு கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளது.

கொலை மிரட்டல்

பெங்களூருவில் பரப்பன அக்ரஹாரா சிறை உள்ளது. இந்த சிறையில் குற்றச்சம்பவங்கள் மற்றும் வழக்குகள் தொடர்பான விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமான கைதிகள் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் வெளிநாட்டை சேர்ந்த கைதிகளும் அடங்குவார்கள். அண்டை மாநிலங்களை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலர் இந்த சிறையில் முன்பு அடைக்கப்பட்டு இருந்தனர்.

இதனால் சிறையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணைக்காக கோர்ட்டுக்கு அழைத்து வரப்படும் கைதிகள் சிலர், மறைத்து வைத்து போதைப்பொருட்களை சிறைக்குள் எடுத்து வர முயற்சிக்கின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது. மேலும் ஹிண்டலகா சிறையில் இருந்த கொலை கைதி ஒருவர், சிறையில் இருந்தபடி செல்போன் மூலம் மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜாமர் கருவி

இதுதொடர்பாக தற்போது என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் செல்போன்கள் எப்படி சிறைக்குள் எடுத்து வரப்பட்டது என்பது தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். இந்த நிலையில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜாமர் கருவி பொருத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக டி.எச்.சி.பி. எனப்படும் ஜாமர் கருவியை சிறை வளாகத்தில் பொருத்த அனுமதி கோரி சிறைத்துறை சார்பில் கர்நாடக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜாமர் கருவி பொருத்துவதற்கு மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. ரூ.4½ கோடி செலவில் சிறை வளாகத்தில் 3 கோபுரங்களை நிறுவுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறைக்குள் இருக்கும் அதிகாரிகள் தொலைபேசி இணைப்புகளை மட்டுமே பயன்படுத்த முடியும் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்