தலித் முதல்-மந்திரி விவகாரத்தில் பிரச்சினை உருவாகும் வகையில் பேசவில்லை; போலீஸ் மந்திரி பரமேஸ்வர் பேட்டி
|தலித் முதல்-மந்திரி விவகாரத்தில் பிரச்சினை உருவாகும் வகையில் பேசவில்லை என்று போலீஸ் மந்திரி பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
தலித் முதல்-மந்திரி விவகாரத்தில் பிரச்சினை உருவாகும் வகையில் பேசவில்லை என்று போலீஸ் மந்திரி பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் நேற்று போலீஸ் மந்திரி பரமேஸ்வர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
பிட்காயின் முறைகேடு
கர்நாடகத்தில் நடந்த பிட்காயின் முறைகேடு விவகாரத்தில் கடந்த பா.ஜனதா ஆட்சியின் போது அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த பிட்காயின் முறைகேடு குறித்து மறு விசாரணை நடத்துவது குறித்து பரிசீலனை நடத்தப்படும். அத்துடன் முதல்-மந்திரி சித்தராமையாவுடன் ஆலோசித்து, அடுத்த முடிவு எடுக்கப்படும்.
காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்து 20 நாட்கள் தான் ஆகிறது. அதற்குள் பா.ஜனதாவினர் ஒற்றை காலில் நின்று கொண்டு இலவச திட்டங்களை நிறைவேற்ற கூறுகிறார்கள். பா.ஜனதாவினர் கொஞ்சம் சமாதானமாக இருக்க வேண்டியது நல்லது.
பிரச்சினையை உண்டாக்கும் விதமாக...
பெங்களூருவில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் பங்கேற்றது, அதிகாரப்பூர்வமான கூட்டம் கிடையாது. அந்த கூட்டத்திற்கு ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ஏற்பாடு செய்யவில்லை. துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் தான் ஏற்பாடு செய்திருந்தார். அவரது தலைமையில் தான் கூட்டமும் நடந்திருந்தது. டி.கே.சிவக்குமார் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் பேசுவதற்காக மட்டுமே ரன்தீப்சிங் சுர்ஜேவாலா வந்திருந்தார். விதானசவுதாவில் இந்த கூட்டம் நடந்து ரன்தீப்சிங் சுர்ஜேவாலா பங்கேற்று இருந்தால், அது தவறானது. இது தனியார் ஓட்டலில் நடந்த கூட்டமாகும்.
தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்-மந்திரி ஆக வேண்டும் என்று நான் கூறியது உண்மை தான். ஆனால் உடனடியாக தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர் முதல்-மந்திரி ஆக வேண்டும் என்று சொல்லவில்லை. தேவையில்லாத பிரச்சினையை உண்டாக்கும் விதமாக நான் பேசவில்லை. நான் பேசிய கருத்தால் தலித் மக்களிடையே ஒரு தைரியம் உண்டாகி இருக்கிறது.
இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.