பங்குனி உத்திர விழாவையொட்டி சரம் குத்தியில் பள்ளிவேட்டை நிகழ்ச்சி: நாளை நடக்கிறது
|சபரிமலை அய்யப்பன் கோவிலில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழாவையொட்டி சரம்குத்தியில் பள்ளிவேட்டை நிகழ்ச்சி நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
திருவனந்தபுரம்,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா கடந்த மார்ச் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
7-ம் திருவிழா நாளான நேற்று வழக்கம் போல் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.பின்னர் நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் மற்றும் வழக்கமான பூஜைகளும், உத்சவ பலி தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையிலும் நடந்தது.
மேலும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேரில் வந்து அய்யப்பனை தரிசனம் செய்ததோடு நெய்யபிஷேக வழிபாடு நடத்தினர்.
பள்ளி வேட்டை நிகழ்ச்சி
9-ம் திருவிழாவான நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 9 மணிக்கு சரம்குத்தியில் பள்ளிவேட்டை நிகழ்ச்சியும், 10-ம் திருவிழாவான நாளை மறுநாள் (புதன்கிழமை) பம்பையில் அய்யப்பனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடைபெறும்.
அன்று மாலையில் கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறும். தொடர்ந்து வழக்கமான பூஜைகளுடன் இரவு நடை அடைக்கப்படும். விழாவையொட்டி சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.