இந்திய வாலிபருடன் காதல்; இந்துவாக மாறிய பாகிஸ்தான் பெண்; 4 குழந்தைகளின் பெயரும் மாற்றம்
|சீமா என்பது இந்து, முஸ்லிம்களுக்கு பொதுப் பெயர் என்பதால், அதே பெயரை வைத்துக் கொண்டுள்ளார். ஆனால், பின்னால் சேர்க்கப்பட்டு இருந்த தனது கணவர் ஹைதரின் பெயரை நீக்கி விட்டார்.
புதுடெல்லி
பாகிஸ்தானை சேர்ந்த பெண் சீமா ஹைதர் (27). இவரது கணவர் குலாம் ஹைதர் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் சீமா ஹைதருக்கு பப்ஜி என்ற கேமிங் செயலி மூலம் டெல்லி கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த சச்சின் மீனா (22) என்பவர் பழக்கமானார். இந்த பழக்கம் காதலாக மாறியது. இதை தொடர்ந்து சீமா ஹைதர் தனது குழந்தைகளுடன் நேபாளம் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தார்.
பின்னர் கிரேட்டர் நொய்டாவை அடைந்து அங்கு சச்சினுடன் வாழ்ந்து வருகிறார்.
பாகிஸ்தான் பெண்ணான சீமா ஹைதரின் கணவர் குலாம் ஹைதர், தனது மனைவி மற்றும் குழந்தைகளை பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்புமாறு பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
பாகிஸ்தானில் இருந்து சட்ட விரோதமாக இந்தியாவில் நுழைந்ததால் அந்த பெண்ணையும் அவருக்கு அடைக்கலம் கொடுத்த சச்சினையும் போலீசார் கைது செய்தனர். நேற்று முன்தினம் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், இவர்களின் காதலை சச்சினின் பெற்றோர் ஏற்றுள்ளனர். இதனால், கிரேட்டர் நொய்டாவில் உள்ள தனது வீட்டில் தங்க அனுமதித்து உள்ளனர்.இந்நிலையில், முஸ்லிம் பெண்ணான சீமா, சச்சினுக்காக இந்து மதத்துக்கு மாறி விட்டார்.
சீமா என்பது இந்து, முஸ்லிம்களுக்கு பொதுப் பெயர் என்பதால், அதே பெயரை வைத்துக் கொண்டுள்ளார். ஆனால், பின்னால் சேர்க்கப்பட்டு இருந்த தனது கணவர் ஹைதரின் பெயரை நீக்கி விட்டார். இப்போது, அவரின் பெயர் சீமா சச்சின் என்று மாற்றப்பட்டு உள்ளது. மேலும், தனது 4 பிள்ளைகளின் பெயர்களையும், ராஜ், பிரியங்கா, பாரி மற்றும் முன்னி என்று இந்து பெயர்களாக சீமா மாற்றி விட்டார்.
சீமாவுக்கும், அவருடைய பிள்ளைகளுக்கும் இந்திய குடியுரிமை அளிக்கும்படி பிரதமர் மோடி, உத்தரபிரதேச முதல்வர் யோகிக்கு சச்சின் வேண்டுகோள் விடுத்துள்ளார். கங்கையில் புனித நீராடிய பிறகு, இந்து முறைப்படி சச்சின், சீமாவுக்கு திருமணம் செய்து வைக்கப்படும் என்று சச்சினின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சீமா கூறியதாவது:-
"என் கணவர் ஒரு இந்து. அதனால் நான் இந்து. நான் இந்தியப் பெண் என்பதை உணர்கிறேன்'. பாகிஸ்தானைன் சென்றால் எனது குடும்பத்தினரும், கணவரின் குடும்பத்தினரும் என்னை கொன்று விடுவார்கள் என கூறினார்.