பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வேண்டும்-மக்கள் கோரிக்கை, பொறுமை வேண்டும்-ராஜ்நாத் சிங்
|இமாசல பிரதேசத்தில் நடந்த பொது கூட்டத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வேண்டும் என மக்கள் கோஷமிட்டபோது, பொறுமை வேண்டும் என மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
ஜெய்சிங்பூர்,
இமாசல பிரதேச சட்டசபை தேர்தல் வருகிற 12-ந்தேதி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து உள்ளது. ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இமாசல பிரதேச சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8-ந்தேதி நடைபெறும். இந்த தேர்தலை முன்னிட்டு ஜெய்சிங்பூர் நகரில் நடந்த பொது கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேசினார்.
அப்போது, மருத்துவமனைகளின் அவசியம் பற்றி குறிப்பிட்ட அவர், இமாசல பிரதேசத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்பட்டு உள்ளது. ஒன்றல்ல. 6 மருத்துவ கல்லூரிகளை திறப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன என்றும் சுட்டி காட்டி பேசினார்.
அப்போது கூட்டத்தில் இருந்த மக்களில் ஒரு பிரிவினர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வேண்டும் என கோஷம் எழுப்பினர். அதற்கு மந்திரி ராஜ்நாத் சிங், பொறுமை வேண்டும் என கூறினார்.
இதேபோன்று சோலன் நகரில் நடந்த பொது கூட்டத்தில் பேசிய சிங், நாட்டில் வாஜ்பாய் மற்றும் பிரதமர் மோடி என இரண்டு பிரதமர்கள் மட்டுமே மற்ற எல்லாரையும் விட இமாசல பிரதேசத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்தனர் என கூறினார்.